கஜா புயல் எதிரொலி; தயார் நிலையில் பல்நோக்கு புகலிடம் - கலெக்டர் ஆய்வு


கஜா புயல் எதிரொலி; தயார் நிலையில் பல்நோக்கு புகலிடம் - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Nov 2018 11:09 PM GMT (Updated: 14 Nov 2018 11:09 PM GMT)

கஜா புயல் எதிரொலியாக பல்நோக்கு புகலிடம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பனைக்குளம்,

அந்தமான் அருகே உருவான குறைந்த அழுத்த தாழ்வு நிலை வழுவடைந்து தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் சின்னமாக நிலை கொண்டுள்ளது. கஜா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சின்னம் இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்களையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும் கடலோர பகுதிகளுக்கு சென்று புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன்படி மண்டபம் யூனியன் பிரப்பன்வலசை ஊராட்சியில் உள்ள பல்நோக்கு புகலிட கட்டிடத்திற்கு சென்று பார்வையிட்டு தயார் நிலையில் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். கட்டிடத்தில் கீழ் தளம் மற்றும் மேல் தளங்களை பார்வையிட்ட அவர் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொண்டு யூனியன் ஆணையாளர் சித்ராவுக்கு உத்தரவிட்டார். குறிப்பாக மின்சார வசதி, மின் தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் வசதி, சமையல் கேஸ், உணவு சமைக்க தேவையான பொருட்கள், குடிநீர், கழிப்பறை வசதிகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் கட்டிடத்தை சுற்றிலும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்துவதற்கும், அங்கு மணலை கொண்டு நிரப்புவதற்கும் உத்தரவிட்டார்.

உதவி தேவைப்படும் போது தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என மண்டபம் யூனியன் அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். அவருடன் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், தாசில்தார் கார்த்திகேயன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் வந்திருந்தனர். முன்னேற்பாடுகளை மண்டபம் யூனியன் ஆணையாளர் சித்ரா, வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், பிரப்பன்வலசை கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார், ஊராட்சி செயலர் பன்னீர்செல்வம் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story