வழிப்பறி செய்த வழக்கு: ரவுடி புல்லட் நாகராஜன் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்


வழிப்பறி செய்த வழக்கு: ரவுடி புல்லட் நாகராஜன் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 14 Nov 2018 11:36 PM GMT (Updated: 14 Nov 2018 11:36 PM GMT)

வழிப்பறி செய்த வழக்கில் ரவுடி புல்லட் நாகராஜன் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

திண்டுக்கல்,

தேனி மாவட்டம் பெரியகுளம் மேல்மங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜன் என்ற புல்லட் நாகராஜன் (வயது 53). ரவுடியான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ்அப்’பில் ஆடியோ வெளியிட்டார். மேலும் பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் போலீசாரை விமர்சித்தும் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவரை கடந்த செப்டம்பர் 10-ந்தேதி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். அதன்பேரில், புல்லட் நாகராஜன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

புல்லட் நாகராஜன் மீது திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் வழிப்பறி செய்ததாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன்படி, கடந்த 2012-ம் ஆண்டு திண்டுக்கல் மேற்கு மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி செய்ததாக புல்லட் நாகராஜன் மீது தொடரப்பட்ட வழக்கு திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, வேலூர் சிறையில் இருந்து போலீஸ் வேனில் பலத்த பாதுகாப்புடன் புல்லட் நாகராஜன் திண்டுக்கல்லுக்கு அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் உத்தரவிட்டார்.

பின்னர், புல்லட் நாகராஜன் மீண்டும் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


Next Story