மாவட்டத்தில், இந்த ஆண்டு 72 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் அதிகாரி தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 72 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் 1098 சைல்டுலைன் சார்பில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சைல்டுலைன் ஆற்காட் நிறுவன இயக்குனர் கேசவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் நன்னடத்தை அலுவலர் சரவணன், மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் வின்சென்ட் சுந்தர்ராஜ், திட்ட மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- சைல்டுலைன் 1098 ஒருங்கிணைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு திட்டமாகும். 1098 என்பது 18 வயது வரை பாதுகாப்பும், பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகளுக்கான தேசிய அளவிலான, கட்டணமில்லாத இலவச அவசர 24 மணி நேர தொலைபேசி எண் ஆகும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆற்காட் தொண்டு நிறுவனம் சைல்டுலைன் திட்டத்தினை கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தி வருகிறது. தற்போது கடந்த 13-ந் தேதி முதல் வருகிற 19-ந் தேதி வரை சைல்டுலைன் சார்பில், தேசிய அளவில் குழந்தைகளின் “என் நண்பன்“ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு ஆண்டில், 659 குழந்தைகளுக்கும், ஆறு ஆண்டுகளில் 2,327 குழந்தைகளுக்கும் பல்வேறு விதமான ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து நடப்பு ஆண்டில் 2 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். பள்ளி படிப்பிலிருந்து பாதியில் நின்ற 62 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 72 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்கெதிரான செயல்களை தடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார். இதில், தொண்டு நிறுவன அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story