நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி
நாமக்கல்லில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
நாமக்கல்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.
இதையொட்டி கால், கை ஊனமுற்றோர், குள்ளமானோர்களுக்கு 50 மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும் நடத்தப்பட்டன.
இதேபோல் முற்றிலும் பார்வையற்றோர் மற்றும் மிக குறைந்த பார்வையற்றோருக்கு ஓட்டப்பந்தயம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், காது கேளாதவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும் நடத்தப்பட்டது.
இதுதவிர கை, கால் ஊனமுற்றோருக்கு இறகுப்பந்து, மேசைப்பந்து போட்டிகளும், பார்வையற்றோருக்கு கைப்பந்து போட்டியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எறிபந்து போட்டியும், காது கேளாதவர்களுக்கு கபடி போட்டியும் நடத்தப்பட்டது. இதில் சுமார் 500 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story