பாலித்தீன் பைகள் விற்பனையை தடுக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை


பாலித்தீன் பைகள் விற்பனையை தடுக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Nov 2018 4:30 AM IST (Updated: 16 Nov 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

பாலித்தீன் பைகள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி, 

பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மாதாந்திர கூட்டம் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு தனிதாசில்தார் சையத்காதர், குடிமைப்பொருள் தனிதாசில்தார்கள் பாலசுப்பிரமணியன், அருங்குளவன், மணிகண்டன், தனிதாசில்தார் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேர்முக உதவியாளர் வெங்கடேசன் வரவேற்றார். கூட்டத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் போது சோப்பு, டீத்தூள் போன்றவற்றை வாங்கச் சொல்லி பொதுமக்களை கட்டாயப்படுத்துவதை தடுக்க வேண்டும். தனியார் அரிசி ஆலைகளில் இருந்து தவிடு, சாம்பல்களை வாகனங்களில் அள்ளிச் செல்லும் போது, காற்றில் பறந்து சாலையில் செல்லும் பொதுமக்களின் கண்களில் விழுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடோனில் இருந்து ரேஷன் கடைக்கு கொண்டு வரப்படும் அரிசி மூட்டைகள் எடை குறைவாக இருப்பதை தடுக்க வேண்டும். 50 மைக்ரான்களுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நுகர்வோர்கள் முன்வைத்தனர். அதற்கு சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் கூட்டத்திற்கு வராத அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்யாணசுந்தரம், சுமதி, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கலைச்செல்வி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார், நுகர்வோர் விழிப்புணர்வு சங்க செயலாளர் அருண்கென்னடி, தலைவர் முருகன், சங்கராபுரம் நுகர்வோர் சங்க தலைவர் மணி, உதவி மின் பொறியாளர் தமிழரசன் உள்பட அலுவலர்கள், நுகர்வோர் கலந்து கொண்டனர்.

Next Story