அரகண்டநல்லூரில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


அரகண்டநல்லூரில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 15 Nov 2018 10:45 PM GMT (Updated: 15 Nov 2018 5:09 PM GMT)

புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கலெக்டரிடம் அரகண்டநல்லூர் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

விழுப்புரம்,

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பேரூராட்சி 6, 7-வது வார்டுகளை சேர்ந்த ஆசிரியர் நகர் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு தென்பெண்ணையாற்றில் இருந்து நேரடியாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க பேரூராட்சி அதிகாரிகள் முடிவு செய்து கடந்த 2013-14-ம் நிதியாண்டில் ஆசிரியர் நகரில் ரூ.25 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதுபோல் அங்கு பெயர் பலகை மட்டும் அமைத்துள்ளனர். இதுபற்றி பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன் காரணமாக நாங்கள் குடிநீர் தட்டுப்பாட்டினால் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் வடிகால், தார்சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்ட பிறகு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய்களை சீரமைத்தால் தார் சாலையும், வடிகாலும் சேதமடையும். ஆகவே தார்சாலை, வடிகால் அமைப்பதற்கு முன்பாகவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய்களை சீரமைத்து காட்சிப்பொருளாக உள்ள தண்ணீர் தொட்டியில் குடிநீர் ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story