தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் கஜாபுயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
‘கஜா’ புயல் கரையை கடப்பதால், தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மீன்வளத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தங்குவதற்காக, நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, உடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
மாத சம்பளம் வாங்கும் எம்.பி.க்கள் புதிய சேனலை எப்படி தொடங்க முடியும்? என்று நடிகர் விஷால் தவறான கருத்து தெரிவித்து உள்ளார். தொடங்கப்பட்ட புதிய சேனலுக்கும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறியுள்ளார். நடிகர் விஷால் ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் வழிமுறை கூட தெரியாதவர்.
நடிகர் கருணாஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆனால் அவர் தற்போது இரட்டை வேடம் போடுகிறார். இதனை மக்கள் பார்த்து கொள்வார்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதித்தாலும், அதற்கான உரிமத்தை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்காது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழக அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story