கொசு ஒழிப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்காத கிராம மக்கள் அதிகாரிகள் வேதனை
டெங்கு கொசு புழு ஒழிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டதோடு தீவிர துப்புரவு பணி நடந்தாலும் கிராமத்தினர் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாயில்பட்டி,
காய்ச்சல் பாதிப்பு இல்லாத கிராமமே இல்லை என்று சொல்லும் நிலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. நகரம் முதல் கிராமம் வரை குழுக்கள் அமைக்கப்பட்டு துப்புரவு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. நிலவேம்பு கசாயம் வழங்குதல். கைகழுவுவதன் அவசியம் குறித்து விளக்குதல் போன்றவை நடந்து வருகிறது.
இதன்படி தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு கிராமங்களில் வீடு, வீடாக ஆய்வு செய்யப்படுகிறது. அன்பில்நகர், கீழசெல்லையாபுரம், சிப்பிப்பாறை, எம்.துரைச்சாமியாபுரம், சல்வார்பட்டி, எறவார்பட்டி, ராஜாபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று தகுந்த ஆலோசனை வழங்கி வருகின்றனர். துப்புரவு பணியும் மேற்கொள்வதோடு குப்பைகளை பராமரிப்பது குறித்தும் விளக்கம் அளித்து வருகின்றனர். மருத்துவ அலுவலர் பாலமுருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
ஆனாலும் கிராமங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்பு போதிய அளவில் இல்லை என்று அதிகாரிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர். குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட இடங்களில் குப்பைகளை கொட்டாதீர்கள் என்று எவ்வளவோ அறிவுறுத்தியும் பலர் இதை கண்டு கொள்வதில்லை.
சுத்தப்படுத்திய மறுநாளே அதே இடத்தில் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கின்றனர். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொசுவை ஒழித்து சுகாதாரம் பேணுவது என்பது எப்படி சாத்தியமாகும் என்றும் அதிகாரிகள் கூறினர். மேலும் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வரும்போது தங்கள் கிராமத்தில் குப்பைகளை அள்ளுவதில்லை என்று சரமாரியாக புகார் கூறுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் தங்கள் ஊரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு பலருக்கு இருப்பதில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
போதுமான ஊழியர்கள் இல்லாத நிலையிலும் மருந்துதெளிப்பு பணி போன்றவை தீவிரமாக நடக்கிறது. அதனை வேடிக்கைபார்க்கவே கூடுகின்றனர். தன்னார்வ அமைப்புகள் இதில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொண்டால் சுகாதார சீர்கேடுகளை களைய முடியும் என்றும் அதிகாரிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
Related Tags :
Next Story