திருமங்கலம் அருகே கனரக வாகனங்களால் சாலை, குடிநீர் குழாய்கள் சேதம்
திருமங்கலம் அருகே லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் குடியிருப்பு பகுதிக்குள் செல்வதால் சாலைகள், குடிநீர் குழாய்கள் சேதமடைந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மதுரை,
திருமங்கலம் கப்பலூர் தொழிற்பேட்டையில் தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான திறந்தவெளி கிட்டங்கி உள்ளது. இந்த கிட்டங்கியில் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி மூடைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிகள் மூலம் அரிசி மூடைகள் இந்த கிட்டங்கிக்கு கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுகிறது. ஆனால், கிட்டங்கியின் பின்புறம் உச்சப்பட்டி கிராம குடியிருப்புகள் உள்ளன. இந்த கிட்டங்கிக்கு 4 வழிச்சாலை மற்றும் உச்சப்பட்டி கிராம குடியிருப்பு ஆகிய பகுதி வழியாக 2 பாதைகள் உள்ளன. ஆனால், அரிசி மூடைகள் ஏற்றி வரும் லாரிகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிக்குள் சென்று வருவதால், அந்த பகுதியில் உள்ள சாலைகள் அடிக்கடி சேதமடைந்து வருகின்றன. இத்துடன் சாலைக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாய்களும் லாரிகளின் எடையை தாங்கமுடியாமல் அவ்வப்போது சேதமடைந்து குடிநீர் வீணாகும் நிலையும் தொடர்கிறது.
எனவே, அந்த லாரிகளை குடியிருப்பு பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கிட்டங்கிக்கு அரிசி மூடை ஏற்றி வந்த லாரி ஒன்று, குடியிருப்பு பகுதிக்குள் சென்று திரும்ப முயன்றது. அப்போது, அந்த பகுதியில் இருந்த சிறிய ஓடைப்பாலத்தில் ஏற முயன்ற போது, பாலம் உடைந்து லாரி கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த டிரைவர் மற்றும் கிளனர் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இதனால், அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி கவிழ்ந்த சமயத்தில் எதிர்ப்புறத்தில் இருந்து எந்த வாகனமும், பொதுமக்களும் வரவில்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே, நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கிக்கு வரும் லாரிகள் உச்சப்பட்டி கிராம குடியிருப்பு பகுதிக்குள் வர அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.
Related Tags :
Next Story