பழனி அருகே தோகைக்காக மயில்கள் வேட்டை?


பழனி அருகே தோகைக்காக மயில்கள் வேட்டை?
x
தினத்தந்தி 16 Nov 2018 4:00 AM IST (Updated: 16 Nov 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே, தோகைக்காக மயில்கள் வேட்டையாடப்படுவதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

நெய்க்காரப்பட்டி,

பழனி தாலுகா கொழுமம் கொண்டான் ஊராட்சி போதுபட்டியில், நேற்று ஒரு தனியார் தோட்டத்தில் 2 மயில்கள் இறந்து கிடந்தன. மேலும் அவற்றின் அருகில் தோகைகள் கிடந்தன. இதேபோல் அந்த பகுதியில் சிலருடைய வீடுகளில் மயில்தோகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தோகைக்காக மயில்கள் வேட்டையாடப்பட்டதாக தகவல் பரவியது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பழனி வனச்சரகர் கணேஷ்ராம் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது தோட்டப்பகுதியில் இறந்து கிடந்தது ஆண்-பெண் மயில் என்பது தெரியவந்தது. தோகைக்காக மயில்கள் கொல்லப்பட்டனவா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயில்கள் இரை தேடி அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு வந்துள்ளன. அப்போது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பயிரில் இருந்த நெற்களை தின்றதால் அவை இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து வீரியம் கொண்ட ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்க்கும்படி விவசாயிகளிடம், வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், தோகைக்காக இந்த மயில்கள் கொல்லப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வடமாநிலங்களில் இருந்து மயில் தோகைகளை விலைக்கு வாங்கி வந்து தங்கள் வீடுகளில் வைத்து விற்பனை செய்கின்றனர். அதற்கான உரிய ரசீதுகளும் அவர்களிடம் உள்ளது, என்றனர்.

Next Story