ஆஸ்பத்திரி-பள்ளிக்கூடங்களில் திரவ கிருமிநாசினி பயன்படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும் கலெக்டர் உத்தரவு


ஆஸ்பத்திரி-பள்ளிக்கூடங்களில் திரவ கிருமிநாசினி பயன்படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 16 Nov 2018 4:30 AM IST (Updated: 16 Nov 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளிக்கூடங்களில் திரவ கிருமிநாசினி பயன் படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு வரும் நோயாளிகளுக்கு திரவ கிருமிநாசினி வழங்கப்பட்டு கைகள் சுத்தப்படுத்தப்படுகிறதா? என்பதை கேட்டு அறிந்தார். மேலும், தனியார் ஆஸ்பத்திரி தலைமை டாக்டரிடம் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டு அறிந்தார். மேலும், ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் அனைவருக்கும் திரவ கிருமிநாசினிகள் வழங்கி கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் திரவ கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆஸ்பத்திரிகளின் நுழைவு வாயில்களில் திரவ கிருமிநாசினி புட்டி வைத்திருக்க வேண்டும். அதை முறையாக பொதுமக்கள் பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ- மாணவிகளுக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் இருக்க திரவ கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களுக்கு திரவ கிருமிநாசினி வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கதிரவன் முன்னிலையில் ஒளிரும் ஈரோடு அமைப்பு தலைவர் அக்னி எம்.சின்னசாமி திரவ கிருமிநாசினி புட்டிகளை மாவட்ட கல்வி அதிகாரிகள் ஏ.முத்துக்கிருஷ்ணன் (ஈரோடு), சிவக்குமார் (கோபி) ஆகியோரிடம் வழங்கினார்.

Next Story