கஜா புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பழவேற்காடு, மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
கஜா புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் நேற்று விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. பழவேற்காடு, மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
திருவள்ளூர்,
கஜா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு, கூவம், குமாரச்சேரி, திருமழிசை, திருவள்ளூர், வேப்பம்பட்டு, வெள்ளவேடு, செவ்வாப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், மணலிபுதுநகர் பகுதிகளில் நேற்று விட்டு விட்டு லேசான மழை பெய்தது.
கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், ஆரம்பாக்கம் சுற்றுவட்டாரங்களிலும் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.
காஞ்சீபுரம் மாவட்டம் பாலுச்செட்டிச்சத்திரம், பொன்னேரிக்கரை, காஞ்சீபுரம், மாமல்லபுரம், கொக்கில மேடு பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்தது.
வண்டலூர், கூடுவாஞ்சேரி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளிலும் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதியில் லைட் அவுஸ்குப்பம், கூனங்குப்பம், செம்பாசிபள்ளிக்குப்பம், வைரவன்குப்பம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். கஜா புயல் காரணமாக அவர்கள் கடந்த 4 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று பழவேற்காடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த முதலியார்குப்பம், ஒதியூர், பரமஞ்சேரி, கடப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மாமல்லபுரம், கொக்கிலமேடு, நெம்மேலி, தேவனேரி, ஒய்யாலிக்குப்பம், பரமண்கேணி பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
Related Tags :
Next Story