புதுவை துறைமுகத்தில் 9-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை


புதுவை துறைமுகத்தில் 9-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
x
தினத்தந்தி 15 Nov 2018 11:58 PM GMT (Updated: 15 Nov 2018 11:58 PM GMT)

புதுவை துறைமுகத்தில் 9-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் அலைகள் சீறிப்பாய்வதால் தடுப்புகள் அமைக்கப்பட்டு கடற்கரை சாலை ‘சீல்’ வைக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

கஜா புயலையொட்டி நேற்று 3-வது நாளாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. பல்கலைக்கழக தேர்வுகள் நடத்தப்பட இருந்த நிலையில் வேறு தேதிக்கு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் சென்று முதல்- அமைச்சர் நாராயணசாமி பார்வையிட்டார்.

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைப்பதற்காக சமுதாய நலக்கூடங்கள், பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வருவாய் துறை சார்பில் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

புதுவையில் நேற்று காலை 10 மணியளவில் லேசான மழை பெய்தது. மதியம் முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 5 மணியளவில் திடீரென்று பலத்த மழை பெய்தது. சுமார் 10 நிமிடங்களே இந்த மழை நீடித்தது. தொடர்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. இதனால் பகல் பொழுதே இரவு போல் காட்சி அளித்தது. பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

கடல் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. கடலில் ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்தன. இதனை தொடர்ந்து தடுப்புகள் அமைத்து கடற்கரை சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. கடுமையான கட்டுப்பாட்டையும் மீறி செயற்கை மணல் பரப்பு பகுதியில் யாரும் கடலில் இறங்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்தால் அலைகள் சீறிப்பாய்வதை பார்க்க குடும்பம் குடும்பமாக பலர் கடற் கரைக்கு வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஒலி பெருக்கி மூலம் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

மோசமான வானிலை, போதிய வெளிச்சமின்மை காரணமாக புதுவையில் இருந்து பெங்களூரு, ஐதராபாத்துக்கு செல்லும் விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. புதுவையில் உள்ள அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று மாலை 4.30 மணி முதல் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

சுற்றுலாதலங்களில் ஒன்றான நோணாங்குப்பம் படகு குழாமில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் ஊசுட்டேரியிலும் படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டது.

புதுவை துறைமுகத்தில் நேற்று காலை முதல் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது. நேற்று மதியம் 2 மணிக்கு 9-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது ஆபத்தான நிலை நீடிப்பதை அடையாளப்படுத்துவதாகும்.

Next Story