‘கஜா’ புயல் தாக்கத்தால் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த மழை மரங்கள் முறிந்து விழுந்தன; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
‘கஜா’ புயல் தாக்கத்தால் தேனி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தேனி,நவ.17-
தமிழகத்தை அச்சுறுத்திய ‘கஜா’ புயல் கடலோர மாவட்டங்கள் மட்டும் இன்றி பிற மாவட்டங்களையும் பதம் பார்த்தது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் புயல் தாக்கம் எதிரொலியாக நேற்று முன்தினம் நள்ளிரவில் மழை பெய்தது. அதிகாலை வரை மழை நீடித்தது.
நேற்று காலையில் 10 மணியளவில் பலத்த காற்று வீசத் தொடங்கியது. பகல் 11 மணியளவில் தேனியை ‘கஜா’ புயல் நெருங்கியது. அப்போது மாவட்டத்தில் பல இடங்களில் புயல் காற்று வீசியது. சுமார் 30 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த காற்று வீசியது. அத்துடன் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 3 மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது.
இந்த மழையால் தேனி என்.ஆர்.டி. நகரில் பிரமாண்ட மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால், அங்கு மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். அதேபோல், தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு, பாரதி 3-வது தெரு, மதுரை சாலை ஆகிய இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. அவையும் அப்புறப்படுத்தப்பட்டன.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. அதுபோல், கண்டமனூர் அண்ணா நகர், பெரியகுளம் தனியார் ஓட்டல் முன்பு, ஜெயமங்கலத்தில் மேல்மங்கலம் சாலை, க.விலக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் ஆகியோர் சம்பவ இடங்களுக்கு துரிதமாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் 3 அமைச்சர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடப்பதாக இருந்தது. இதற்காக அமைச்சர்களை வரவேற்று ஏராளமான விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. பலத்த காற்றுக்கு விளம்பர பதாகைகள் கிழிந்தும், சாய்ந்தும் விழுந்து கிடந்தன.சில பதாகைகள் வைக்கப்பட்ட இடத்தில் இருந்து சில மீட்டர் தூரம் சென்று விழுந்து கிடந்தன. மேலும், அப்பகுதியில் நின்ற ஒரு மின்கம்பமும் சாய்ந்தது. இதனால் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியான காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத் தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கினர். முல்லைப்பெரியாற்றில் குளிப்பதற்கோ, துணிகள் துவைப்பதற்கோ செல்லக்கூடாது. மின்கம்பங்கள் மற்றும் மரங்களுக்கு கீழ் பகுதியில் நிற்க கூடாது என வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
போடியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. இதில் காமராஜர் சாலை, பெரியாண்டவர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடின. ‘கஜா’ புயல் தாக்கத்தினால் போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த தென்னை, வாழை, பப்பாளி மரங்கள் ஏராளமானவை சாய்ந்து விழுந்தன.
பலத்த மழை எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வரட்டாற்றில் பல மாதங்களுக்கு பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அதுபோல் கொட்டக்குடி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. கொட்டக்குடி ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் பறித்து குவித்து வைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான தேங்காய்களை வெள்ள நீர் அடித்துச் சென்றது. இதனை தேனியில் ஆற்றங்கரையோரத்தில் நின்று கொண்டு சிலர் சேகரித்தனர்.
பலத்த மழையால் மஞ்சளாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பெரியகுளம் பகுதியில் பெய்த பலத்த மழையால் ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தேவாரம் அருகேயுள்ள பொட்டிப்புரம் கிராமத்தில் பழமையான தொகுப்பு வீடுகளில் வசித்து வந்த 15-க்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பு கருதி சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.
புயல் மற்றும் பலத்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு நேற்று பகலில் துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக் கப்பட்டதாகவும், இரவுக்குள் மின் வினியோகம் சீராகும் என்றும் மின்வாரியம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த புயலால் மாவட்டத்தில் உயிர்ச்சேதம் இல்லை என்றும், பெரிய அளவில் பொருட்சேதம் இல்லை என்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. இதனால், நேற்று காலையில் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்தார். அதன்படி, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
Related Tags :
Next Story