‘கஜா’ புயல் எதிரொலி: தூத்துக்குடியில் பலத்த மழை; 5 வீடுகள் இடிந்தன பள்ளிகளுக்கு விடுமுறை


‘கஜா’ புயல் எதிரொலி: தூத்துக்குடியில் பலத்த மழை; 5 வீடுகள் இடிந்தன பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 17 Nov 2018 5:00 AM IST (Updated: 16 Nov 2018 11:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ‘கஜா’ புயல் எதிரொலியாக நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு 5 வீடுகள் இடிந்தன. மேலும், மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

தூத்துக்குடி, 

வங்கக்கடலில் உருவான ‘கஜா‘ புயல் நேற்று நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவில் லேசான காற்று வீசத் தொடங்கியது.

அதிகாலையில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாக காணப்பட்டது.

இந்த புயல் எச்சரிக்கையால் நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மழை காரணமாக மாப்பிள்ளையூரணி அருகே உள்ள மேலஅழகாபுரியில் பார்வதி என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தன.

தூத்துக்குடி 3 செண்ட் அந்தோணியார்புரத்தில் உள்ள ஒரு மின்கம்பம் சரிந்தது. படகுகள் காற்றின் வேகத்தில் அடித்து செல்லாமல் இருப்பதற்காக ஒவ்வொரு படகுகளும் தனித்தனியாக கட்டி வைக்கப்பட்டு இருந்தன.

இந்த மழை பாதிப்பு குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘கஜா‘ புயல் காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை. நேற்று இரவு மழை பெய்தது. மொத்தம் 182 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. காலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. ஆனாலும் புயல் தமிழகத்தை கடந்து கேரளாவுக்கு செல்லும் போது, தூத்துக்குடியின் வடக்கு பகுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை வந்தது. இதனால் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிளில் அனைத்துத்துறை அதிகாரிகள் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து மீட்பு உபகரணங்களுடன் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் 2 வீடுகள் முழுமையாகவும், 3 வீடுகள் பகுதியாகவும் இடிந்து சேதம் அடைந்து உள்ளன. எந்தவித உயிர்ச்சேதமோ, கால்நடைகள் இறப்போ இல்லை. ஆனாலும் அனைத்துத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் அனைத்து மீனவர்களும் கரைக்கு திரும்பிவிட்டனர். இன்று (அதாவது நேற்று) மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 50.3 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

திருச்செந்தூர் - 32, குலசேகரன்பட்டினம்- 10, காயல்பட்டினம்- 50.3, விளாத்திகுளம்- 3, காடல்குடி- 1, வைப்பார்- 14, கோவில்பட்டி- 9, கடம்பூர் - 2, கழுகுமலை- 4, ஓட்டப்பிடாரம்- 2, வேடநத்தம்- 3, கீழஅரசடி- 5, சாத்தான்குளம்- 4, ஸ்ரீவைகுண்டம்- 4, தூத்துக்குடி- 39.5.

Next Story