ஓசூர் அருகே பயங்கரம்: காதல் திருமண தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் பிடிபட்டனர்


ஓசூர் அருகே பயங்கரம்: காதல் திருமண தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 16 Nov 2018 11:30 PM GMT (Updated: 16 Nov 2018 7:22 PM GMT)

ஓசூர் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி கடத்தப்பட்டு கொடூரமாக ஆணவ கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பெண்ணின் தந்தை உள்பட 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணப்பா. இவரது மகன் நந்தீஸ் (வயது 25). இவர் ஓசூரில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சுவாதி (20). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். படித்து வந்தார்.

நந்தீசும், சுவாதியும் ஒரே ஊர் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் காதல் ஜோடி நந்தீஸ், சுவாதி கடந்த 15.8.2018 அன்று சூளகிரி திம்மராயசாமி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் 2 பேரும் ஓசூரில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ராம் நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். நந்தீஸ் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு புனுகன்தொட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக வெளியே சென்ற நந்தீசும், அவரது மனைவி சுவாதியும் வீடு திரும்பவில்லை. அவர்களை நந்தீசின் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் நந்தீசின் தம்பி சங்கர் (20) ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன நந்தீஸ், சுவாதி ஆகிய 2 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகில் உள்ள காவிரி ஆற்றில் ஒரு வாலிபரும், இளம்பெண் ஒருவரும் அடித்து கொல்லப்பட்டு வயரால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக அந்த பகுதி மக்கள் பெலகவாடி போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.


விசாரணையில் அவர்கள் ஓசூரை சேர்ந்த நந்தீஸ், அவரது மனைவி சுவாதி என தெரியவந்தது. இதுகுறித்து கர்நாடக போலீசார் ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

அதில் நந்தீஸ், சுவாதி காதலித்து திருமணம் செய்ததை பிடிக்காத பெண்ணின் குடும்பத்தினர் அவர்களை கடத்தி சென்று கொடூரமாக அடித்து ஆணவ கொலை செய்து உடல்களை கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றில் வீசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆணவ கொலை செய்ததாக பெண்ணின் தந்தையான சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன் (40), பெண்ணின் பெரியப்பா வெங்கடேஷ் (43), உறவினர் புனுகன்தொட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (26) ஆகிய 3 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் ஓசூர் போலீசாரும், பெலகவாடி போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இது தொடர்பாக பெண்ணின் மற்றொரு பெரியப்பா சூடுகொண்டப்பள்ளி அஸ்வதப்பா (45), உறவினர் வெங்கட்ராஜ் (25), பாலவனப்பள்ளியை சேர்ந்த கார் டிரைவர் சாமிநாதன் (30) ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட நந்தீஸ், சுவாதி உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு ஓசூர் கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காதல் திருமணத்தால் நடந்த இந்த ஆணவ கொலைகளால் ஓசூர் அருகே பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story