உடுமலையை சுற்றியுள்ள பகுதிகளில் குளங்கள் நிரம்புவதால் நீர்மட்டம் உயருகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி


உடுமலையை சுற்றியுள்ள பகுதிகளில் குளங்கள் நிரம்புவதால் நீர்மட்டம் உயருகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 Nov 2018 4:30 AM IST (Updated: 17 Nov 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையை சுற்றியுள்ள பகுதிகளில் குளங்கள் நிரம்புவதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போடிபட்டி,

மனிதர்களின் வாழ்வில் உணவு மிகவும் முக்கியமானது. அந்த வகையில் உணவு உற்பத்தியின் அடிப்படையான விவசாயத்தொழில் மிக முக்கிய இடத்தைப்பெறுகிறது. அதே நேரத்தில் மனிதன் வாழ்வதற்கு தண்ணீர் எவ்வளவு தேவையோ அதே அளவு விவசாயம் செழிக்கவும் தண்ணீர் மிக முக்கியமானதாகும். அதனை கருத்தில் கொண்ட நமது முன்னோர் நீர்மேலாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார்கள்.

அந்த வகையில் பெரும்பாலும் ஆற்றங்கரைகளிலேயே குடியிருப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள். மேலும் மழைநீரை வீணாக்காமல் முழுமையாக சேமிக்கும் வகையிலான கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளார்கள். அதன்படி குடியிருப்புகளில் விழும் மழைநீர் வழிந்தோட மழைநீர் வடிகால்கள், அந்த நீரை சேமிக்க ஊருணிகள், குட்டைகள், குளங்கள், ஏரிகள், அணைகள் ஆகியவற்றையும் அவை நிரம்பினால் வழிந்தோட கால்வாய்களையும் உருவாக்கி பராமரித்து வந்துள்ளார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் சீராக தொடர்வதால் தண்ணீர்பஞ்சம் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பெருகி வரும் மக்கள் தொகை, அதிக எண்ணிக்கையிலான குடியிருப்புகள், நகரமயமாக்கல் என பல்வேறு காரணங்களால் பல நீர்த்தேக்கங்கள் காணாமல் போயுள்ளன. இருக்கும் ஒரு சில குளங்களும் முறையாக பராமரிக்கப்படாத நீர் வரத்துக்கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களால் தண்ணீரில்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் திருமூர்த்தி அணையிலிருந்து தளி கால்வாய் மூலம் தண்ணீர் பெறப்பட்டு சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி வழங்கக்கூடிய உடுமலையை அடுத்த செங்குளம், ஒட்டுக்குளம், பெரியகுளம், செட்டிக்குளம், தினைக்குளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், ஆகியவற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நிரம்பி காணப்படுகிறது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேநேரத்தில் உடுமலை, குடிமங்கலம் பகுதிகளிலுள்ள பெரும்பாலான குளங்கள், போதி நீர்வரத்தின்றி வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. இதற்கு காரணம் நீர்வரத்து வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படாதது ஆகும். தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மழைநீர் வடிகால்களில் பெயரளவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

வீதிகளில் தேங்கிய மழைநீர், வீடுகளில் புகுந்த வெள்ளநீர் போன்ற செய்திகள் முறையாக பராமரிக்கப்படாத மழைநீர் வடிகால்களின் பிரதிபலிப்பேயாகும் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்தால் மழைநீர் சேகரிக்கப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது திண்ணம்.


Next Story