‘கஜா’ புயலின் தாக்கம்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் காற்றுடன் மழை
‘கஜா’ புயலின் தாக்கத்தால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் காற்றுடன் மழை பெய்தது. மடத்துக்குளம் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர்கள் சாய்ந்தன.
உடுமலை,
‘கஜா’ புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் விழுந்து மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. அதன்படி ‘கஜா’ புயலின் தாக்கம் காரணமாக திருப்பூர் மாவட்டத்திலும் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அணைகள், குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. சில இடங்களில் மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன.
திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளிலும் நேற்று அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரல் மழையாக தொடங்கிய இந்த மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், குடைகளை பிடித்தபடியும், மழையில் நனைந்தபடியும் சென்றனர். பலத்த மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் ஏராளமானோர் தங்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினார்கள்.
வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படியே சென்றனர். ரோடுகளில் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி நின்றது. வழக்கமாக காலையில் பரபரப்பாகவே காணப்படும் முக்கிய ரோடுகளில் நேற்று வாகனங்கள் மெதுவாக சென்றன. சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மழை காரணமாக திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் இதமான சூழல் இருந்தது. மதியம் வரை பெய்த மழை அதற்கு பின்னர் சிறிது ஓய்ந்தது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் தொடர்ந்து திருப்பூரிலும் கனத்த மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலையில் நேற்று முன்தினம் மாலையில் பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்தது. பின்னர் நேற்று காலையிலும் மழை பெய்தது. மழையினால் பழனிசாலை, மத்திய பஸ் நிலையம், தளி–பொள்ளாச்சி சாலை சந்திப்பு பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சிரமப்பட்டனர்.
உடுமலை–தளி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் கார், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்றும் வகையில் உள்ள சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வந்தன. மேலும் மழையுடன் காற்று வீசியதால் மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள விளம்பர தட்டிகள் சாய்ந்து விழுந்தன.
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. பள்ளி வளாகம், பஸ் நிலையம், முக்கிய சாலைகள், வயல்கள், தோப்புகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. காற்று காரணமாக குமரலிங்கம்–மடத்துக்குளம் சாலை பகுதியில் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த 60 நாட்களே ஆன கரும்பு பயிர் சாய்ந்து விட்டன. அதே போல் சோழமா தேவி பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன. குமரலிங்கம்–மடத்துக்குளம் சாலை பகுதியில் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் நெல்நடவு நட்டு 10 நாட்கள் ஆனநிலையில் நெற்வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் சுமார் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாராபுரம் நகர சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாராபுரம் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்க்கும் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் கட்டுமான வேலையில் ஈடுபட்டு இருந்த சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. அதே போல் செங்கல் உற்பத்தியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தொழிலை நம்பி இருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த மழையால் தாராபுரம் பகுதியில் பாதிப்போ, சேதமோ ஏற்படவில்லை.
வெள்ளகோவில் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் நேற்று காலை 5 மணிக்கு தொடங்கிய மழை மாலை 3 மணி வரை விட்டு விட்டு பெய்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தனியார் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகள் செயல்பட்டன. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. கடைகளில் வியாபாரம் குறைந்தது. பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இல்லை. நகரில் உள்ள மருத்துவ மனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. முத்தூரில் காற்றுடன் லேசான சாரல் மழை பெய்தது. காங்கேயத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை மழை விட்டு விட்டு பெய்தது.
அவினாசியில் நேற்று காலை 5.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு மதியம் 12.30 மணிவரை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
சேவூர், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டம்பாளையம், வடுகபாளையம், ஆலத்தூர், பொங்கலூர், தத்தனூர், குட்டகம், புலிப்பார், போத்தம்பாளையம், பாப்பாங்குளம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சேவூர் பகுதியில் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மழையால் சேவூர் பகுதியில் உள்ள விசைத்தறிக்கூடங்கள், பனியன் நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.