தாராபுரம் அருகே கார் கவிழ்ந்து டிராவல்ஸ் உரிமையாளர் பலி, 3 பேர் படுகாயம்


தாராபுரம் அருகே கார் கவிழ்ந்து டிராவல்ஸ் உரிமையாளர் பலி, 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Nov 2018 3:45 AM IST (Updated: 17 Nov 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே கார் கவிழ்ந்து டிராவல்ஸ் உரிமையாளர் பலியானார். போலீஸ் ஏட்டு உள்பட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தாராபுரம்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஒப்பந்தம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவருக்கு சொந்தமான வீடு திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ளது. இந்த வீட்டின் ஆவணங்களை ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சுந்தரம் என்பவர் பறித்து விட்டதாக, அவர் மீது சுப்பிரமணி வீரபாண்டி போலீசில் புகார் செய்தார்.

இந்த புகார் தொடர்பாக ஒட்டன்சத்திரம் சென்று சுந்தரத்திடம் விசாரிக்க வீரபாண்டி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி வீரபாண்டி ராசப்பகோவில் தெருவை சேர்ந்த ஆனந்த் (40) என்பவருக்கு சொந்தமான காரில், வீரபாண்டி போலீஸ் ஏட்டு பூபதி, புகார் கொடுத்த சுப்பிரமணி மற்றும் ஆனந்தின் நண்பரும், பரணி டிராவல்ஸ் உரிமையாளருமான பாஸ்கரன் (35) ஆகியோர் சென்றனர். பின்னர் ஒட்டன்சத்திரம் சென்று சுந்தரத்திடம் விசாரித்து விட்டு அதே காரில் 4 பேரும் வீரபாண்டி திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது சுப்பிரமணியை தவிர மற்ற 3 பேரும் மது குடித்து இருந்ததாக கூறப்படுகிறது.

காரை பாஸ்கரன் ஓட்டினார். ஒட்டன்சத்திரம்–தாராபுரம் சாலையில் எரகாம்பட்டி பிரிவு அருகே கார் வந்தபோது மதுபோதையில் இருந்த பாஸ்கரன் எதிர்பாராத விதமாக காரின் பிரேக்கை பிடித்துள்ளார். அப்போது திடீரென்று கார் தலைப்புற கவிழ்ந்தது இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பாஸ்கரன் இறந்தார். மற்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் விரைந்து சென்று பாஸ்கரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த மற்ற 3 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story