குமரி மாவட்டத்தில் பலத்த மழை: கோழிப்போர்விளை பகுதியில் 85 மி.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் பலத்த மழை: கோழிப்போர்விளை பகுதியில் 85 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 17 Nov 2018 2:27 AM IST (Updated: 17 Nov 2018 5:50 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கோழிப்போர்விளை பகுதியில் 85 மி.மீ. மழை பதிவானது.

நாகர்கோவில்,

வங்க கடலில் உருவான கஜா புயல் நேற்று அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கத்தால் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் நகர்ப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் சாலைகள் அனைத்திலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. நாகர்கோவில் வடசேரி சின்னராசிங்கன் தெருவில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் வீட்டை, விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. நேரம் ஆக, ஆக மழை வெள்ளம் கொஞ்சம், கொஞ்சமாக வடிய தொடங்கியது.

இதேபோல் பறக்கை-தெங்கம்புதூர் சாலையில் உள்ள குளத்துவிளை பகுதியிலும் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் வாகனங்களை ஓட்டி சென்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியையும் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தென்னந்தோப்பு, வாழைத்தோட்டம், நெல் வயல்கள் போன்றவற்றில் உள்ள பயிர்களையும் மழை வெள்ளம் சூழ்ந்தன.

இதுபற்றிய தகவல் அறிந்த அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அணில்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று மழை நீரை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த மழையினால் பழையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணியாறு உள்ளிட்ட ஆறுகள், வாய்க்கால்கள் போன்றவற்றில் மழை தண்ணீர் பாய்ந்தோடியது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்ட பகுதிகளில் பெய்த மழை அளவு (மி.மீ.) விவரம் வருமாறு:-

பேச்சிப்பாறை- 8.2, பெருஞ்சாணி- 3.4, சிற்றார் 1- 32.2, சிற்றார் 2- 42, பொய்கை- 4, மாம்பழத்துறையாறு- 54, புத்தன் அணை- 3.8, முக்கடல் அணை- 8.7, பூதப்பாண்டி- 14.6, களியல்- 12.4, கன்னிமார்- 11.2, கொட்டாரம்- 72, குழித்துறை- 26.2, மயிலாடி- 33, நாகர்கோவில்- 73, தக்கலை- 66, குளச்சல்- 14.4, இரணியல்- 51.2, ஆரல்வாய்மொழி- 4, கோழிப்போர்விளை- 85, அடையாமடை- 27, குருந்தங்கோடு- 83.4, முள்ளங்கினாவிளை- 24 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது. இதில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 85 மி.மீ. மழை பெய்துள்ளது.

இந்த மழையின் காரணமாக நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 425 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 507 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு 141 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 245 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. சிற்றார்-1 அணைக்கு 172 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நாகர்கோவில் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய முக்கடல் அணை நேற்று அதிகாலை 25 அடி கொள்ளளவை எட்டியது. இந்த அணை நிரம்பியதை தொடர்ந்து அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் மறுகாலாக பாய்ந்தது. ஆனால் நேற்று பகலில் குமரி மாவட்டத்தில் வெயில் இருந்தது.

நாகர்கோவில் வடசேரி சின்னராசிங்கன் தெருவில் தேங்கி நின்ற மழைநீரை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட பால்வளத்தலைவருமான எஸ்.ஏ.அசோகன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள மக்கள் கழிவுநீர் ஓடை அடைப்பின் காரணமாக மழைநீர் தேங்கி நிற்பதாக தெரிவித்தனர். உடனே அவர் அங்கிருந்தபடியே நகராட்சி அதிகாரிகளிடம் பேசி, கழிவுநீர் அடைப்பை சரிசெய்து, மழைநீர் வடிந்தோட நடவடிக்கை மேற்கொண்டார்.

இதேபோல் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வும் சின்னராசிங்கன் தெரு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவரிடமும் பொதுமக்கள் மேற்கண்ட கோரிக்கையை தெரிவித்தனர். அவர் உடனடியாக நகராட்சியின் 52 வார்டுகளிலும் கழிவுநீர் ஓடைகளை தூர்வார வேண்டும். இல்லை என்றால் மக்களை திரட்டி தி.மு.க. போராட்டம் நடத்தும் என்றார்.

கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. ஆஸ்டின் பறக்கை- தெங்கம்புதூர் சாலையில் குளத்துவிளை பகுதிக்கு நேரடியாக சென்று அப்பகுதியில் சாலையில் பாய்ந்தோடிய மழை வெள்ளத்தை சரி செய்யவும், அரசு தொடக்கப்பள்ளியை சூழ்ந்திருந்த மழை வெள்ளத்தை வடிந்தோட செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

மழைக்கு 5 வீடுகள் சேதம்

பலத்தமழைக்கு நாகர்கோவில் சுற்று வட்டார பகுதியில் 5 வீடுகள் சேதமடைந்தன. வடசேரி பெரிய ராசிங்கன் தெருவில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கோவில் தெருவில் ஒரு வீடும், கிருஷ்ணன்கோவில் அம்மன்கோவில் தெருவில் உள்ள ஒரு வீடும் இடிந்து விழுந்தன. மேலும் புத்தளம் இலந்தைவிளை பகுதியில் ஒரு வீடும், அரிய பெருமாள்விளையில் ஒரு வீடும் இடிந்து விழுந்தன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மொத்தம் 5 வீடுகள் சேதம் அடைந்தன. இந்த வீடுகள் அனைத்தும் ஓடுகளால் ஆன வீடுகள்தான். இவற்றில் 2 வீடுகள் முழுமையாகவும், 3 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளன.


Next Story