‘கஜா’ புயலால் மயிலாடுதுறை பகுதியில் மரங்கள் சாய்ந்தன


‘கஜா’ புயலால் மயிலாடுதுறை பகுதியில் மரங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 16 Nov 2018 10:45 PM GMT (Updated: 16 Nov 2018 9:25 PM GMT)

‘கஜா’ புயலால் மயிலாடுதுறை பகுதியில் மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மயிலாடுதுறை,

‘கஜா’ புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. அப்போது காற்றுடன் மழை பெய்ததால் மயிலாடுதுறை நகர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு பாலக்கரை அருகே ஒரு வங்கியின் வாசலில் இருந்த பழமையான மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதேபோல் மயிலாடுதுறை தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்த வேப்ப மரம் சாய்ந்து விழுந்தது. மேலும் மயிலாடுதுறை நகருக்கு உட்பட்ட குமரக்கட்டளைத்தெரு, பெசன்ட் நகர் பூங்கா, தபால் நிலையம், பூக்கடைத்தெரு, திருவாரூர் சாலை, பட்டமங்கல ஆராயத்தெரு, எல்.பி.நகர், தருமபுரம் சாலை உள்ளிட்ட இடங்களிலும் இருந்த மரங்கள் சாய்ந்தன.

தகவல் அறிந்த மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் விஜயராகவன், நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி பொறியாளர் ஜோதிமணி ஆகியோர் மேற்கண்ட இடத்திற்கு சென்று சாலையில் குறுக்கே விழுந்து கிடந்த மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையில் ஊழியர்கள், மரம் அறுக்கும் கருவிகளை பயன்படுத்தி பொக்லின் எந்திரம் மூலம், விழுந்து கிடந்த மரங்களை அகற்றினர். இதனால் திருவாரூர், சிதம்பரம், மணல்மேடு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.

புயலின் போது காற்று வீசியதால் மயிலாடுதுறை மற்றும் அதன் வட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மின்வாரிய மயிலாடுதுறை செயற் பொறியாளர் முத்துக்குமரன் மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர்கள் கங்குலி, அசோக்குமார் ஆகியோர் பணியாளர்களை கொண்டு சாலையின் குறுக்கே சாய்ந்து கிடந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்பேரில் நேற்று மதியம் நகர் முழுவதும் மின்வினியோகம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மதியம் வரை மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

திருக்கடையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான பிள்ளை பெருமாள்நல்லூர், டி.மணல்மேடு, கண்ணங்குடி, கிள்ளியூர், நட்சத்திரமாலை, காடுவெட்டி, இரவணியன்கோட்டகம், சீவகசிந்தாமணி, சரபோஜிராஜபுரம், சிங்கானோடை, கிடங்கல், மாமாகுடி, மருதம்பள்ளம், காலமநல்லூர், சின்னங்குடி, சின்னமேடு ஆகிய கிராமங்களில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்தன. இதனால் போக்குவரத்து தடைபட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டனர்.

மேற்கண்ட பகுதிகளில் ஊராட்சி நிர்வாகத்தினர், வருவாய்த்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், சாய்ந்த மரங்களை பொக்லின் எந்திரம் மூலமும், மரம் அறுக்கும் எந்திரம் மூலமும் அகற்றினர். மேலும், பொதுமக்களும் அவரவர் வீட்டில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் புயலால் மின்கம்பங்கள் சாய்ந்தும், கம்பிகள் அறுந்து விழுந்தும் மின்சாரத்தால் எந்தவித மின்பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. மேலும், புயலால் பாதிக்கக்கூடிய இடங்களில் இருந்த பொதுமக்களை புயல் பாதுகாப்பு கூடம், சமுதாய கூடம், பள்ளிகள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

மணல்மேடு மற்றும் அதனை சுற்றி உள்ள திருச்சிற்றம்பலம், கடலங்குடி, ஆத்தூர், கல்யாணசோழபுரம், பூதங்குடி, ராதாநல்லூர், விருதாங்கநல்லூர், வக்காரமாறி, முடிகண்டநல்லூர், சி.புலியூர், வல்லம், பாப்பாக்குடி, இழுப்பப்பட்டு, ராஜசூரியன்பேட்டை, திருவாளபுத்தூர், சித்தமல்லி, பட்டவர்த்தி, தலைஞாயிறு, வில்லியநல்லூர், கொற்கை, கிழாய் உள்ளிட்ட பகுதிகளிலும் கஜா புயலால் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த மரங்களை சம்பந்தப்பட்ட துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேற்கண்ட பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு பகல் 11 மணி அளவில் கொடுக்கப்பட்டது.


Next Story