அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்த வழக்கு: அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கு தலா ரூ.1000 அபராதம்
கோவையில் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்த வழக்கில் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கோவை,
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந் தேதி மத்திய அரசு எடுத்தது. கள்ளநோட்டுகள் மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்த நடவடிக்கையை வரவேற்று இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் அன்று காலை கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அந்த வழியாக சென்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
இதற்கு அவர்கள் போலீசில் எவ்வித அனுமதியும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார், சங்கர், சிவக்குமார், தேவகோவிந்தராஜ் ஆகிய 5 பேர் மீது அனுமதி இல்லாமல் பொது இடத்தில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பட்டாசுகளை வெடித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. போலீஸ் தரப்பில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
முன்னதாக மாஜிஸ்திரேட்டு வேலுசாமி, குற்றம் சாட்டப்பட்ட 5 பேரிடம் அனுமதி இல்லாமல் பட்டாசுகளை வெடித்தீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள் அனுமதி வாங்கிதான் பட்டாசுகளை வெடித்தோம் என்று கூறினார்கள்.
அப்படி என்றால் ஏன் போலீசார் நீங்கள் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்ததாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர் என்று கேட்டார். தொடர்ந்து அவர்கள் 5 பேருக்கும் தலா ரூ.1000 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு வேலுசாமி தீர்ப்பு கூறினார்.