கஜா புயல் கரையை கடந்த போது ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது; பலத்த காற்றால் படகு சேதம்
கஜா புயல் கரையை கடந்த போது ராமேசுவரம், பாம்பனில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. அதே நேரத்தில் பலத்த காற்றால் படகு சேதம் அடைந்தது.
ராமேசுவரம்,
வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடலோர பகுதியில் வசித்து வரும் மீனவர்களும், பொதுமக்களும் புயல் காப்பகம் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பாம்பன் துறைமுகத்தில் 8–ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. ஆனால் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் கடல் வழக்கத்தை விட அமைதியாக காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை வரை காற்றோ, மழையோ இன்றி புயலுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் புயல் கரையை கடந்த போது, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியது. ராமேசுவரம், பாம்பன் பகுதியில் பலத்த காற்று, இடி–மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பாம்பன் ரோடு பாலத்தில் சென்ற பஸ்சின் மேற்கூரை காற்றில் பறந்து விழுந்தது.
இதையடுத்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பாம்பன் ரோடு பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாம்பன், ராமேசுவரம்,திருப்பாலைக்குடி, மோர்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக கடல் உள்வாங்கியது. பின்னர் நேற்று காலையில் நேரம் செல்லச் செல்ல உள்வாங்கியிருந்த கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.
வடக்கு கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் காற்றின் திசை மாறியதால் வடக்கு கடல் பகுதி அமைதியாகவும், தென்கடல் பகுதி கொந்தளிப்புடனும் காணப்பட்டது.
தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு படகை கடல் அலை இழுத்துச்சென்றது. சேதம் அடைந்த அந்த படகை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கடந்த 2 நாட்களாக தனுஷ்கோடிக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
தெற்குவாடி பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்க பாதையில் பெருமளவு மழைநீர் தேங்கியிருந்தது. உடனடியாக அது மோட்டர் மூலம் அகற்றப்பட்டது. இதேபோல முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபம், பாம்பன் சின்னப்பாலம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. தனுஷ்கோடி பகுதி மீனவர்களை கரையூர் புயல் காப்பகம் கட்டிடத்தில் தங்க வைத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், தேசிய பேரிடர் மீட்பு குழு கமாண்டர் பிரமோத் மீனா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் தெற்கு கரையூர் பகுதியில் உள்ள புயல் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த மீனவ குடும்பத்தினரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு தங்கி இருந்தவர்களுக்கு உணவு முறையாக வழங்கப்பட்டதா? என கேட்டறிந்தார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை கஜா புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அரசு அறிவுரையின்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டது. மனித உயிர்சேதமும் இல்லை. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. உடனடியாக அவை அகற்றப்பட்டன. ராமேசுவரம் தீவு பகுதியில் புயல் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவரும் அவர்களது வீடுகளுக்கு திரும்பி விட்டனர்.
தனுஷ்கோடி பகுதி மீனவர்களை மட்டும் மேலும் ஒருநாள் முகாமில் தங்க அறிவுறுத்தி உள்ளோம். வானிலை மையத்தின் அடுத்த அறிவிப்பை தொடர்ந்து மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். கலெக்டருடன் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, பறக்கும்படை தாசில்தார் காளிமுத்தன், ஊராட்சி செயலர்கள் கதிரேசன் (தங்கச்சிமடம்), விசுவநாதன் (பாம்பன்) ஆகியோர் சென்றிருந்தனர்.