‘லிப்ட்’டுக்குள் வைத்து 4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய பெண்


‘லிப்ட்’டுக்குள் வைத்து 4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய பெண்
x
தினத்தந்தி 17 Nov 2018 4:43 AM IST (Updated: 17 Nov 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

‘லிப்ட்’டுக்குள் வைத்து பெண் ஒருவர் 4 வயது சிறுமியை கொடூரமான முறையில் தாக்கினார். நெஞ்சை பதற வைக்கும் அந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை, 

மும்பை டிராம்பே மகாராஷ்டிரா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் தயானந்த். இவரது மனைவி சரிகா. இவர்களுக்கு பியூஷ் என்ற மகனும், ஜான்கவி (வயது 4) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று மதியம், சிறுமி ஜான்கவி கட்டிடத்தின் கீழ்தளத்தில் பியூசுடன் விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது அதே கட்டிடத்தை சேர்ந்த ரிஷ்வானா ஷேக் (42) என்ற பெண் சிறுமியை லிப்டின் உள்ளே வருமாறு அழைத்தார். அதன்ேபரில் சிறுமி லிப்டிற்குள் சென்றாள்.

உடனே அந்த பெண் லிப்டின் விளக்கை அணைத்து விட்டு சிறுமியை ஈவு, இரக்கமின்றி கொடூரமான முறையில் தாக்க தொடங்கினார். குழந்தை என்று கூட பாராமல் அவளை லிப்டுக்குள் தள்ளி காலால் பலமுறை எட்டி உதைத்தார். மேலும் சிறுமி அணிந்திருந்த கம்மலை பறிக்க முயன்றார். இதில் சிறுமி வலிதாங்க முடியாமல் கதறி அழுதாள். அவளது அழுகுரல் கேட்டு அவளது தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அவர்கள் லிப்டை திறந்த போது, சிறுமி உள்ளே படுகாயத்துடன் சுருண்டு கிடந்தாள். இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அவர்கள், ரிஷ்வானா ஷேக்கிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர் அவளை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து ரிஷ்வானா ஷேக் மீது டிராம்பே போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர். எதற்காக இவ்வாறு செய்தார் என்பது குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சிறுமியை ரிஷ்வானா ஷேக் தாக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியானது.

பார்ப்போரின் நெஞ்சை பதபதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story