தூக்கி வீசப்பட்ட படகுகள் தூள், தூளான மின்கம்பங்கள் - கஜா புயலுக்கு தனித்தீவாக மாறிய வேதாரண்யம்


தூக்கி வீசப்பட்ட படகுகள் தூள், தூளான மின்கம்பங்கள் - கஜா புயலுக்கு தனித்தீவாக மாறிய வேதாரண்யம்
x
தினத்தந்தி 16 Nov 2018 11:35 PM GMT (Updated: 16 Nov 2018 11:35 PM GMT)

கஜா புயலின் கோர தாண்டவத்துக்கு வேதாரண்யம் தனித்தீவாக மாறியது.

தஞ்சாவூர்,

கஜா புயலின் கோர தாண்டவத்துக்கு வேதாரண்யம் தனித்தீவாக மாறியது. படகுகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. ஏராளமான மின்கம்பங்கள் தூள், தூளானது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் வீடுகளுக்குள்ளேயே பொதுமக்கள் முடங்கினர்.

வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாகை மாவட்டத்தில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத்துறையினரும் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் தஞ்சை-வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம், வேளாங்கண்ணி-வேதாரண்யம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

புயல் கரையை நெருங்கி வந்தபோது வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. காற்றின் வேகமும் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் நள்ளிரவு வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தபோது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. வேதாரண்யம் பகுதியில் பழமை வாய்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேராடு சாய்ந்தன. 20 ஆயிரம் மின்கம்பங்களும் சாய்ந்தன. இதில் சில மின்கம்பங்கள் காற்றின் வேகத்தில் தூள், தூளானது.

வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. சுமார் 15 ஆயிரம் வீடுகளில் மேற்கூரைகளே கிடையாது. ஏராளமான கடைகளும் சேதம் அடைந்தன. மின்கம்பங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இருளில் மக்கள் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சாலையோரம் இருந்த பெரிய மரங்கள் எல்லாம் வரிசையாக முறிந்து சாலையில் விழுந்து கிடந்ததால் வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி, கோடியக்கரை-வேதாரண்யம், கோடியக்கரை- ஆறுக்காட்டுத்துறை, வேளாங்கண்ணி-வேதாரண்யம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் கூட யாராலும் செல்ல முடியவில்லை.

வெளியூரில் இருப்பவர் களிடம் உதவி கேட்கலாம் என்றால் கூட அவர்களால் முடியவில்லை. ஏனெனில், செல்போன் கோபுரங்கள் அனைத்தும் சேதம் அடைந்ததால் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. வேதாரண்யத்தில் இருக்கும் தங்களது உறவினர்களுக்கு என்ன ஆனது? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று அறிய முடியாமல் வெளியூரில் வசிக்கும் உறவினர்கள் திண்டாடினார்கள்.

தஞ்சை, நாகை பகுதியில் இருந்து கார்களில் சொந்த ஊருக்கு செல்லலாம் என நினைத்து சென்றவர்களும் போக்குவரத்து துண்டிப்பினால் நடுவழியில் பல மணிநேரம் காத்து நிற்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. கடைகள் பூட்டப்பட்டு இருந்ததால் உணவு பொருட்கள் கூட வாங்க முடியாமல் சாலையோரம் வாகனங்களிலேயே காத்து இருந்தனர்.

வேதாரண்யத்தில் உள்ள 35-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டதால் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு சாலை மார்க்கமாக ஒரு அடி கூட செல்ல முடியாத நிலை உள்ளது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டதாலும், மூடப்பட்டதாலும் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் வினியோகம் செய்யப்படவில்லை. பஸ் வசதி இல்லாமல் தவித்த மக்கள், இருசக்கர வாகனங்கள் மூலம் வெளியே செல்லலாம் என நினைத்தாலும் பெட்ரோல் கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டனர்.

புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களை சுற்றியுள்ள மரங்களும் முறிந்து விழுந்ததால் அங்கு தங்கியுள்ள மக்களால் வெளியே செல்லவும், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றினால் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை ஆகிய இடங்களில் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட படகுகள், 200 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டன.

சில இடங்களில் படகுகள், கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு இருந்தன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், பனைமரங்களும் முறிந்து விழுந்தன. கோடியக்கரை சரணாலயத்தில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. பலத்த காற்று காரணமாக சரணாலயத்தில் உள்ள 25 மான்கள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. கஜா புயலுக்கு தனித்தீவாக வேதாரண்யம் மாறி உள்ளதால் அங்குள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கு பால் வாங்க கூட முடியாத நிலையில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

இதனால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. மரங்கள், மின்கம்பங்களை அப்புறப்படுத்தும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வேளாங்கண்ணி-வேதாரண்யம் இடையே சாலைகளில் கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அகற்றப்பட்டு சுமார் 23 மணி நேரத்திற்கு பிறகு நேற்று மாலை 5 மணி முதல் போக்குவரத்து தொடங்கியது. ஆனால் திருத்துறைப்பூண்டி-வேளாங்கண்ணி, கோடியக்கரை-வேதாரண்யம், கோடியக்கரை-ஆறுக்காட்டுத்துறை இடையே இன்னும் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

கோடியக்கரையும் தற்போது தனித்து விடப்பட்டுள்ளது. வேதாரண்யம் கடற்கரை பகுதியாகும். அங்கு வசிப்பவர்களுக்கு புயல் ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் கஜா புயல் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கவில்லை. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பை போன்று தற்போது பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.


Next Story