‘உத்தவ் தாக்கரேயுடன் இனி தேர்தல் கூட்டணி குறித்து பேச மாட்டேன்’ : பா.ஜனதா மந்திரி சுதீர் முங்கண்டிவார்
‘அவ்னி’ புலி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கடும் விமர்சனம் செய்த உத்தவ் தாக்கரேயுடன் இனி தேர்தல் கூட்டணி குறித்து பேச மாட்டேன் என்று பா.ஜனதா மந்திரி சுதீர் முங்கண்டிவார் அறிவித்து உள்ளார்.
மும்பை,
மத்திய மற்றும் மராட்டிய பா.ஜனதா கூட்டணி அரசில் சிவசேனா பங்கேற்று உள்ளது. ஆனாலும் பா.ஜனதாவுடன் சிவசேனா தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் சிவசேனா தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி அறிவித்து உள்ளது. ஆனால் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது.
இது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயுடன் பா.ஜனதா மந்திரி சுதீர் முங்கண்டிவார் அவ்வப்போது பேசி வருவது வழக்கம்.
இந்த நிலையில் யவத்மால் மாவட்டத்தில் மனித வேட்டையாடிய ‘அவ்னி’ என்ற பெண் புலி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் வனத்துறை மந்திரியான சுதீர் முங்கண்டிவார் வனவிலங்கு ஆர்வலர்களின் எதிர்ப்புக்கு ஆளானார். அதுமட்டும் இன்றி தனது சொந்த கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி மேனகா காந்தி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானார்.
இந்த நிலையில் புலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் உத்தவ் தாக்கரே தெரிவித்த கருத்தால் வேதனை அடைந்து இருப்பதாகவும், எனவே இனிமேல் அவருடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச மாட்டேன் என்றும் சுதீர் முங்கண்டிவார் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து உத்தவ் தாக்கரேயின் கடும் விமர்சனத்தால் நான் மனவேதனையும், அதிருப்தியும் அடைந்தேன். இதை நான் அவரிடம் தெரிவித்து விட்டேன். அவரை சிறந்த நண்பராக கருதி இருந்தேன். அவர் கடுமையாக விமர்சிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
எனவே தேர்தல் கூட்டணி குறித்து இனி உத்தவ் தாக்கரேயுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன்.
நான் சமூக வலைத்தளத்தில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் அவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் பலர் எனக்கு எதிராக மோசமான வார்த்தைகளை சமூக வலைத்தளத்தில் பயன்படுத்தி இருந்தனர். அவற்றை என் மகள் என்னிடம் காட்டினாள். இதனால் நானும், எனது குடும்பத்தினரும் வேதனை அடைந்துள் ேளாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story