பணிவரன்முறை செய்ய வலியுறுத்தி, அடுத்த மாதம் ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தர்மபுரியில் கு.பாலசுப்பிரமணியன் தகவல்
ரேஷன்கடை பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வலியுறுத்தி அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.
தர்மபுரி,
ரேஷன்கடை பணியாளர் சங்கத்தின் கோரிக்கை விளக்க கூட்டம் தர்மபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். மாநில பிரசார செயலாளர் சுகமதி கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். இதில் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ரேஷன்கடை பணியாளர்களுக்கு பொது வினியோகத்திட்ட ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதிக்கு உரிய ரசீதை வழங்க வேண்டும். பொதுவினியோகத்திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும்.
ரேஷன்கடை பணியாளர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் சரியான எடையில் பொருட்களை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஏ.டி.எம். மையங்கள் மூலம் ரேஷன்கடை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ரேஷன்கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், ரேஷன்கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story