எந்திர கோளாறால் மண்எண்ணெய் வினியோகம் தடை: விற்பனை நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


எந்திர கோளாறால் மண்எண்ணெய் வினியோகம் தடை: விற்பனை நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 18 Nov 2018 4:15 AM IST (Updated: 17 Nov 2018 10:34 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் எந்திர கோளாறு காரணமாக மண்எண்ணெய் வினியோகம் தடைபட்டதால் சில்லறை விற்பனை நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

நாமக்கல், 

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இங்குள்ள மண்எண்ணெய் சில்லறை விற்பனை நிலையம் மூலம் மாதம் ஒரு முறை நாமக்கல் நகர மக்களுக்கு பொது வினியோகமாக மண்எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த மாதம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மண்எண்ணெய் லோடு கடந்த 14-ந் தேதி கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு வந்து உள்ளது. அதை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பணி நேற்று நடந்தது. இதற்காக அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் மண்எண்ணெய் பெற நீண்ட வரிசையில் தங்களின் பிளாஸ்டிக் கேன்களை வைத்து காத்திருந்தனர்.

பின்னர் காலை 9.30 மணி முதல் சங்க விற்பனையாளர் பாலச்சந்திரன் தலைமையிலான அலுவலர்கள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மண்எண்ணெய் வினியோகம் செய்தனர். இந்த நிலையில் 11 மணியளவில் மண்எண்ணெய் வழங்கும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அதன் வினியோகம் தடைப்பட்டது.

இதையடுத்து நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் கேன்களை வரிசையிலேயே வைத்துவிட்டு மண்எண்ணெய் சில்லறை விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அதைத்தொடர்ந்து விற்பனையாளர் மற்றும் அலுவலர்கள் எந்திரத்தை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் பொதுமக்கள் சமரசம் அடைந்தனர்.

பின்னர் 12.30 மணியளவில் எந்திரம் சரி செய்யப்பட்டு மீண்டும் மண்எண்ணெய் வினியோகம் நடந்தது. இதனால் சுமார் 1½ மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- காலை முதல் மண்எண்ணெய் வாங்க காத்திருந்தோம். திடீரென எந்திர கோளாறு என வினியோகத்தை நிறுத்திவிட்டனர். இதுபோன்று கோளாறான எந்திரங்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்களுக்கு தடையின்றி அரசின் சேவை கிடைக்கும்.

நாமக்கல்லில் 22 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெய் தேவைப்படும் நிலையில் சுமார் 8 ஆயிரம் லிட்டர் தான் வருகிறது. இதில் மாதம் ஒரு முறை மட்டும் மண்எண்ணெய் வழங்கப்படுவதால் நாமக்கல்லில் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு கூட மண்எண்ணெய் கிடைப்பதில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக அளவில் விற்பனை நிலையங்களுக்கு மண்எண்ணெய் லோடை அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story