மேச்சேரி-ஓமலூர் இடையே அதிநவீன வசதிகளுடன் காய்கறி மார்க்கெட் எடப்பாடி பழனிசாமி பேச்சு
மேச்சேரி-ஓமலூர் இடையே அதிநவீன வசதிகளுடன் காய்கறி மார்க்கெட் அமைக்கப்படும் என்று மேச்சேரியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேச்சேரி,
மேச்சேரி-நங்கவள்ளி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ரோகிணி வரவேற்றார். பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, சின்னதம்பி, ராஜா, மாநில கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளையும், 820 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மேச்சேரி மற்றும் நங்கவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.15 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 67 குடியிருப்புகளும், மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் 338 குடியிருப்புகளும், மேச்சேரி, பி.என்.பட்டி மற்றும் வீரக்கல்புதூர் ஆகிய மூன்று பேரூராட்சிகளிலும் என மொத்தம் 698 குடியிருப்புகளுக்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.ஆட்சியில் தான் சேலம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட ரூ.391.28 கோடி மதிப்பீட்டில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 190 குடும்பங்களில் 18.2 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் பயன்பாட்டில் உள்ளது. சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் பவானியில் இருந்து மேட்டூர் வரையிலும், மேச்சேரியில் இருந்து ஓமலூர், தொப்பூர் வரையிலும் 4 வழிச்சாலை அமைக்கப்படும். மேச்சேரிக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன்.
சேலத்தில் இருந்து ஓமலூர் வரும் வழியில் ரெயில்வே கேட் உள்ளது. அங்கே ஒரு மேம்பாலம் கட்டுவதற்கு அரசு ஆணையிட்டு, அந்தப் பணி விரைவில் தொடங்கப்படும். ஓமலூரில் இருந்து மேட்டூர் வரைக்கும் பல இடங்களில் ரெயில்வே கேட் இருக்கிறது. தொட்டப் பட்டியில் ரூ.19.34 கோடியில் ரெயில்வே கேட் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும். முத்துநாயக்கன்பட்டியிலும் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும்.
மேச்சேரி மற்றும் ஓமலூர் ஒன்றிய பகுதிகளில் சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். மானாவரி தக்காளியும் மற்றும் வேறு பல காய்கறிகள் உற்பத்தி இங்கு அதிகமாக இருக்கிறது. அதிகமாக தக்காளி உற்பத்தியாகும் சமயத்திலும், தக்காளி விலை வீழ்ச்சியடையும்பொழுதும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதனால், மேச்சேரி-ஓமலூர் இடையே காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யக்கூடிய அதிநவீன வசதிகளுடன் மிகப்பெரிய மார்க்கெட் அமைக்கப்படும்.
விவசாயி உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்கள் போன்றவை வீணாகாமல் இருப்பதற்காக அங்கே ஒரு குளிர்சாதன கிடங்கு ஏற்படுத்தப்படும். விற்காத பழங்களை பாதுகாப்பாக அந்த குளிர்சாதன கிடங்கில் விவசாயிகள் எந்த வாடகையும் இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஓமலூருக்கும், மேச்சேரிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் பயிரிட்டுள்ள விவசாயிகள் இத்திட்டத்தினால் பயன்பெறுவார்கள். விவசாயிகள் கொண்டு வருகின்ற பழங்கள், காய்கறிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்காக மின்னணு வர்த்தக ஏற்பாட்டை அரசு செய்திருக்கிறது.
மேட்டூரிலிருந்து உபரி நீரை எடுத்து, மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரிகளை எல்லாம் நிரப்புவதற்கு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அந்தப் பணிகள் தொடங்கப்படும். அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் எதை சொல்கிறோமோ? அதை செய்து காட்டுவோம். ஆனால் மற்றவர்கள் அப்படி இல்லை. சொல்வதோடு சரி? எதையும் செய்து முடிக்கமாட்டார்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதைத்தொடர்ந்து வனவாசியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொடக்கம் மற்றும் வெள்ளரிவெள்ளியில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம், கூட்டுறவுத்துறை மூலம் வெள்ளாண்டிவலசு சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மதியம் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளையும், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறும் போது, வனவாசி சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மாணவ-மாணவிகள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அரசு பாலிடெக்னிக் கல்லூரியை தொடங்கி வைத்தேன்.
உள்ளாட்சி சாலைகளை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. படிப்படியாக அனைத்து ஊராட்சிகளில் இருக்கின்ற ஊராட்சி சாலைகள் சீர் செய்யப்படும். போக்குவரத்து வசதி வேண்டுமென்று வைத்த கோரிக்கைகளுக்கு அனைத்து ஊர்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, புதிய கால்நடை மருந்தகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிய மேம்பாலங்கள் என எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து எடப்பாடி அருகே சவுரியூரில் புதியதாக அமைக்கப்பட்ட சுகாதார நிலைய கட்டிடம் மற்றும் ஆவடத்தூர் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், அவர் ஏற்காடு மற்றும் கருமந்துறை பகுதி மலைவாழ் மக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மேச்சேரி ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் சதாசிவம், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் எமரால்டு வெங்கடாசலம், ஒன்றிய அவைத்தலைவர் சீனிவாசன், மேச்சேரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் கலையரசன், சந்திரசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் அண்ணாமலை, மேச்சேரி கூட்டுறவு சங்க தலைவர் மணிவண்ணன், மேட்டூர் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் வீட்டு வசதி சங்க தலைவர் ராஜேந்திரன், எம்.காளிப்பட்டி ஊராட்சி செயலாளர் பாஸ்கரன், குட்டப்பட்டி ஊராட்சி செயலாளர் சுவாமிநாதன், ஜலகண்டாபுரம் நகர அவைத்தலைவர் மாதையன், நங்கவள்ளி பேரூர் செயலாளர் குப்புசாமி, ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மாணிக்கவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் அசோகன், திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story