‘கஜா’ புயலால் மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன: நீடாமங்கலத்தில் 36 மணிநேரம் மின்தடை பொதுமக்கள் அவதி


‘கஜா’ புயலால் மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன: நீடாமங்கலத்தில் 36 மணிநேரம் மின்தடை பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 18 Nov 2018 4:15 AM IST (Updated: 18 Nov 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

‘கஜா’ புயலில் மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்ததால் நீடாமங்கலத்தில் 36 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

நீடாமங்கலம்,

‘கஜா’ புயல் காரணமாக நீடாமங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தது. சாலைகளின் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கொத்தமங்கலம் சாலையில் மேல்நிலை நீர்தேத்கத்தொட்டியின் மேல் மரம் விழுந்து சேதமடைந்தது. புயலுக்கு முன்பே மின்சாரம் நிறுத்தப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

15-ந்தேதி இரவு முன்எச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. நீடாமங்கலத்தில் புயல்காரணமாக 36 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சேதமடைந்த மின்கம்பங்களையும், மின்கம்பிகள் மீது விழுந்து கிடந்த மரங்களையும் மின்வாரிய பணியாளர்கள் அகற்றினர்.

நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் ஒரு சில கிராமங்களில் மட்டும் நேற்று காலை மின்வினியோகம் செய்யப்பட்டது.மின்வாரியத்தில் போதுமான பணியாளர்கள் இல்லாததால் புயலின் போது போர்க்கால அடிப்படையில் பணிகளை செய்ய இயலாத நிலை இருந்தது.

36 மணிநேரத்திற்கு பிறகு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும் மின்சாரம் இல்லாததால் கடந்த 2 நாட்களாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப முடியாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், குளிக்க முடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். நீடாமங்கலம் பகுதி வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ரெயில்கள் நேற்று தாமதமாக சென்றன. 

Next Story