குரங்கணியில் மலையேற்ற பயிற்சி: இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 6 பேர் தப்பி ஓட்டம் - அனுமதியின்றி அழைத்து சென்ற சுற்றுலா வழிகாட்டியிடம் விசாரணை


குரங்கணியில் மலையேற்ற பயிற்சி: இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 6 பேர் தப்பி ஓட்டம் - அனுமதியின்றி அழைத்து சென்ற சுற்றுலா வழிகாட்டியிடம் விசாரணை
x
தினத்தந்தி 17 Nov 2018 9:19 PM GMT (Updated: 17 Nov 2018 9:19 PM GMT)

அனுமதியின்றி குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 6 பேர் வனத்துறையினரிடம் இருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்களை அழைத்து சென்ற சுற்றுலா வழிகாட்டியிடம் விசாரணை நடந்து வருகிறது.

போடி,

போடி அருகே குரங்கணி மலைப்பகுதி உள்ளது. இங்குள்ள கொழுக்குமலை, இயற்கை எழில் கொஞ்சும் சிறந்த சுற்றுலா தலம் ஆகும். குரங்கணிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கொழுக்குமலை வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி குரங்கணி பகுதியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 23 பேர், ஒத்தைமரம் என்னுமிடத்தில் காட்டுத்தீயில் கருகி பலியாகினர்.

இந்த சம்பவம் எதிரொலியாக குரங்கணி வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் மலையேற்ற பயிற்சிக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டன. ஆனால் மலையேற்ற பயிற்சி விதிமுறைகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. மேலும் வனத்துறையினர் உதவியுடன் சிலர், சட்ட விரோதமாக மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்தநிலையில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஓர் (வயது 32), ஏஞ்சலா(30), திஸ்ட்(34), சோரம் (31), யோரம் (34), சுலிஜா (30) ஆகிய 6 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். இதில் 3 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அங்குள்ள சுற்றுலா இடங்களை அவர்கள் கண்டுகளித்தனர்.

பின்னர் அவர்கள், குரங்கணி மலைப்பகுதியில் உள்ள டாப் ஸ்டேசன் செல்ல முடிவு செய்தனர். இதற்காக மூணாறில் உள்ள டிரெக்கிங் பைன் என்ற சுற்றுலா நிறுவனத்தை அணுகினர். அந்த நிறுவனம் சார்பில் சுற்றுலா வழிகாட்டி ரவி (46) என்பவர் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

டாப் ஸ்டேசன் பகுதியை சுற்றி பார்த்த இஸ்ரேல் நாட்டினர் திடீரென குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டனர். டாப் ஸ்டேசனில் இருந்து 16 கிலோமீட்டர் தூரம் உள்ள குரங்கணி மலைப்பாதை வழியாக சுற்றுலா வழிகாட்டி உள்பட 7 பேரும் நடந்து வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குரங்கணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் குரங்கணிக்கு சென்று 7 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அனுமதியின்றி மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போடி வனத்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், 7 பேரையும் ஜீப்பில் ஏற்றி போடி தென்றல் நகரில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களிடம் வன அலுவலர்கள் அன்பு, வெங்கடேசன் ஆகியோர் பாஸ்போர்ட், விசா குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் அனுமதியின்றி மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 6 பேரும் ஆத்திரம் அடைந்து தங்களது மொழியில் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர்கள், அங்குள்ள இரும்பு கதவின் மீது ஏறி குதித்து தப்பி ஓடி விட்டனர்.

சுற்றுலா வழிகாட்டியாக வந்த ரவியிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அவரிடம் வழிகாட்டிக்கான எந்த ஆதாரமும் இல்லை. மூணாறு அருகே உள்ள நல்லதண்ணி எஸ்டேட் பகுதியை சேர்ந்த அவரிடம் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தப்பி ஓடிய இஸ்ரேல் நாட்டினர் பற்றி வனத்துறை சார்பில் போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 6 பேரும் இஸ்ரேல் நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறையில் வேலை செய்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story