திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’வின் கோரப்பிடியில் சிக்கி 2,300 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் நாசம்


திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’வின் கோரப்பிடியில் சிக்கி 2,300 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் நாசம்
x
தினத்தந்தி 18 Nov 2018 5:00 AM IST (Updated: 18 Nov 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் 2 ஆயிரத்து 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த தோட்டக்கலை பயிர்கள் நாசமாயின.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ‘கஜா’ புயல் கோரத்தாண்டவமாடியது. புயலால், பலத்த சூறாவளி காற்றுடன் சுமார் 4 மணி நேரம் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. சாலையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டிருந்தார்.

இதற்காக 1,110 பேரை கொண்ட 81 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில், நெடுஞ்சாலை, தீயணைப்பு, போலீஸ், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்கள் இருந்தனர். அவர்கள் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில், சாய்ந்து கிடந்த மரங்களை தற்காலிகமாக அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். நேற்று முன்தினம் இரவு முதல் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் சீரமைப்பு பணிகள் நடந்தன. இதையடுத்து மதியம் 2.30 மணிக்கு அந்த சாலையில் போக்குவரத்து தொடங் கப் பட்டது.

பலத்த மழையால் திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டியில் உள்ள தென்னந்தோப்புகளில் தண்ணீர் தேங்கி நின்றது. ரெட்டியார்சத்திரம், நீலமலைக்கோட்டை பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள், சோளம் சூறாவளி காற்றுக்கு சேதமடைந்தன. வேடசந்தூர் பகுதியில் எம்.எல்.ஏ. பரமசிவம், புயலால் சேதமடைந்த பகுதிகளில் ஆய்வு செய்தார். மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

செந்துறை, மணக்காட்டூர் பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த தென்னை, மா, கொய்யா உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதையடுத்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் வேரோடு சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வைத்தனர்.

கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் உள்ள மாவூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால், அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.

வத்தலக்குண்டு பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த முருங்கை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தன. நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள், கஜா புயலுக்கு முறிந்தன. இதேபோல் பூக்கள், சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்தன.

சின்னாளபட்டி பகுதியில் வாழை, மக்காச்சோளம், நாற்றாங்கால் பண்ணைகள் உள்ளிட்டவை அதிகளவு பாதிக்கப்பட்டு உள்ளது. செம்பட்டியை அடுத்த எஸ்.பாறைப்பட்டி கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளன. கோபால்பட்டியை அடுத்த அதிகாரிபட்டி பகுதியில் கருப்பையா என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை கொட்டகை சூறாவளி காற்றுக்கு சரிந்து விழுந்தது. அங்கு கோழிகள் வளர்க்கப்படாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

பழனி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் மழைக்கு சேதமடைந்தன. தாடிக்கொம்பு பகுதியில் புயல் காரணமாக சுமார் 25 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் சேதம் அடைந்தன. அகரம், கோட்டூர், ஆவாரம்பட்டி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.

‘கஜா’ புயலுக்கு மாவட்டம் முழுவதும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர். 3 மாடுகள், 30 ஆடுகள் இறந்துள்ளன. 243 குடிசைகள், ஓட்டு வீடுகள் இடிந்துள்ளன. 1,104 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன என்று கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசனிடம் (பொறுப்பு) கேட்டபோது, இன்றைய (நேற்று) நிலவரப்படி திண்டுக்கல்லில் ‘கஜா’ புயல் தாக்கியதில் சுமார் 2 ஆயிரத்து 300 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக முருங்கை, வாழை, நெல்லி உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவு சேதமடைந்துள்ளன.

அதன்படி 450 ஏக்கர் முருங்கை, 250 ஏக்கர் வாழை, 380 ஏக்கர் நெல்லி, 450 ஏக்கர் கண்வலிக்கிழங்கு ஆகியவை அதிக அளவு சேதமடைந்துள்ளன. இதுபோக தக்காளி, கத்தரி, பப்பாளி, அவரை, புடலை, பாகற்காய் உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்துள்ளன. மலைக்கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலைக்கிராமங்களில் போக்குவரத்து சீரான உடன் கணக்கெடுப்பு நடத்தப்படும். பின்னர் இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அளித்து, விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தரப்படும், என்றார்.

சூறாவளி காற்றால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வேளாண் இணை இயக்குனர் மனோகரனிடம் கேட்டபோது, ‘கஜா’ புயலினால் மாவட்டம் முழுவதும் மரங்கள் தான் அதிக அளவு சாய்ந்துள்ளன. மழைக்கு பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் மழைக்கு சாய்ந்துள்ளன. மக்காச்சோளம் தற்போது தான் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் மழைக்கு மக்காச்சோள பயிர்கள் சாய்ந்துள்ளன. வரும் நாட்களில் வெயில் அடித்தால் அவை மீண்டும் நன்றாக வளர்ந்துவிடும். அப்படி வளரவில்லை என்றால், பின்னர் மழை சேதங்கள் குறித்து கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும். மற்ற பயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, என்றார்.


Next Story