கோமாரி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மருத்துவ குழுக்கள் அமைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்; அமைச்சர்கள் உத்தரவு


கோமாரி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மருத்துவ குழுக்கள் அமைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்; அமைச்சர்கள் உத்தரவு
x
தினத்தந்தி 17 Nov 2018 10:45 PM GMT (Updated: 17 Nov 2018 10:06 PM GMT)

கோமாரி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மருத்துவ குழுக்கள் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் அரசின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு வணிக வரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் கா.பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா, எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து அரசுத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதன்பின்னர் அதிகாரிகள் மத்தியில் அவர்கள் பேசும்போது கூறியதாவது:–

வேளாண்மைத்துறை சார்பில் 2018–2019 ஆம் ஆண்டில் 25 ஆயிரத்து 340 ஹெக்டேர் பரப்பளவில் நெல், 17 ஆயிரத்து 645 ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானிய வகைகள், 4 ஆயிரத்து 732 ஹெக்டேர் பரப்பளவில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மேலும் எண்ணெய் வித்துகள் 17 ஆயிரத்து 449 ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 376 ஹெக்டேர் பரப்பளவிலும், கரும்பு 8 ஆயிரத்து 555 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பில் பழங்கள், காய்கறிகள், நறுமண பொருட்கள், மூலிகை செடிகள், பூக்கள் ஆகியன 31 ஆயிரத்து 806 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் கையேடு தயாரித்து வழங்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் அளுக்குளி, அந்தியூர், அவல்பூந்துறை, புஞ்சைபுளியம்பட்டி, கொடுமுடி, சத்தியமங்கலம் ஆகிய 6 இடங்களில் வேளாண்மை குளிர்பதன கிடங்கு செயல்பட்டு வருகிறது. அங்கு 2 ஆயிரத்து 271 டன் விளைபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் விளைபொருட்களை சேமிப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்காத வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நோய் பாதித்த கால்நடைகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் அமைக்க வேண்டும். மேலும், கால்நடைகள் உள்ள பகுதிகளுக்கே நேரில் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். வருவாய்த்துறையின் மூலம் புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டு, வீடுகள் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் பட்டாக்களை அந்தந்த பகுதி மக்களுக்கே வழங்கிடவும், பட்டா வழங்கப்பட்ட இடத்தில் வீடுகள் கட்டுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

சுகாதாரத்துறையின் மூலம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியை கர்ப்பிணி தாய்மார்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ–மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், மார்க்கெட் போன்ற இடங்களில் நோய் தொற்றா வண்ணம் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மேலும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளும் வகையில் கை கழுவும் திரவம் வழங்கப்பட்டுள்ளது.

குடிநீர் வடிகால் வாரியத்தினர் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் குழாய் இணைப்புகளில் பழுது ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கூறினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், தலைமை வன பாதுகாவலர் நாகநாதன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, உதவி கலெக்டர் (பயிற்சி) பத்மஜா, ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேசன், மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான் உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story