டெங்கு, பன்றி காய்ச்சல்; தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பிரத்யேக வார்டுகள் அமைக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்


டெங்கு, பன்றி காய்ச்சல்; தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பிரத்யேக வார்டுகள் அமைக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 18 Nov 2018 4:00 AM IST (Updated: 18 Nov 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் வருகிறவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பிரத்யேக வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஹரிகரன் தெரிவித்து உள்ளார்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கி பேசியதாவது:– பொதுமக்கள் காய்ச்சல் வந்தால் மருந்து கடைக்கு சென்று தாங்களாகவே மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது. டாக்டர்களின் ஆலோசனை பேரில் தான் மருந்து சாப்பிட வேண்டும்.

மேலும் 4, 5 நாட்கள் காய்ச்சல், மூச்சு திணறல், வயிற்றுபோக்கு போன்றவை இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது சாதாரண காய்ச்சலுக்கும் பொருந்தக்கூடியதுதான். எனவே, இந்த அறிகுறியுடன் இருக்கும் நோயாளிகளுக்கு ரத்தப்பரிசோதனை உடனடியாக செய்வது அவசியம்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கட்டில் வசதிகள், மருந்துகள், நோய் கண்டுபிடிக்கும் கருவிகள், தேவையான ரத்தம் மற்றும் தட்டணுக்கள் ஆகியவை போதுமான அளவிற்கு இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். நில வேம்பு கசாயம் அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமல்லாமல், பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களில் அனைவருக்கும் தொடர்ந்து வழங்க வேண்டும்.

அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு 24 மணிநேரமும் செயல்படும் ஆலோசனை மையமும், பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அதுபோலவே தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பிரத்யேக வார்டுகள் அமைத்திட வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான போதிய மருந்துகள் தயார்நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆரம்பநிலையிலே நோய் கண்டுப்பிடிக்கும் கருவிகள் உதவியுடன் கண்டறிந்து உரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story