வெடிமருந்து தொழிற்சாலையில் அதிகாரிகள் மீது வன்கொடுமை புகார் கூறிய பெண்கள் உள்பட 21 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு இணை பொதுமேலாளர் நரேந்திரா பேட்டி


வெடிமருந்து தொழிற்சாலையில் அதிகாரிகள் மீது வன்கொடுமை புகார் கூறிய பெண்கள் உள்பட 21 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு இணை பொதுமேலாளர் நரேந்திரா பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2018 4:08 AM IST (Updated: 18 Nov 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

வெடிமருந்து தொழிற்சாலையில் அதிகாரிகள் மீது வன்கொடுமை புகார் கூறிய பெண்கள் உள்பட 21 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக இணை பொது மேலாளர் நரேந்திரா கூறினார்.

குன்னூர்,

குன்னூர் அருகே அருவங்காட்டில் மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் 3 பெண்கள், உயர் அதிகாரிகள் 2 பேரால் வன்கொடுமைக்கு ஆளாகியதாக புகார் கூறினர். இது தொடர்பாக நிர்வாக தரப்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையின் இணை பொது மேலாளர்(நிர்வாகம்) நரேந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 2017–ம் ஆண்டு நவம்பர் மாதம் 1–ந் தேதி சி.எப்.எல்.யு. தொழிற்சங்கத்தின் ஒரு பிரிவு சார்பில் நிர்வாகத்திடம் புகார் கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் தொழிற்சாலையில் பணிபுரியும் 3 பெண்களை உயர் அதிகாரிகள் 2 பேர் வன்கொடுமை செய்வதாக கூறப்பட்டு இருந்தது. அதன் நகல்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் பெண்கள் உரிமை கமி‌ஷனுக்கு அனுப்பப்பட்டது.

தொழிலாளர்களில் யார் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அதுகுறித்த புகார் கடிதத்தை தொழிலாளர் நல பிரிவிடம்தான் கொடுத்திருக்க வேண்டும். அதில் திருப்தி இல்லையென்றால் இணை பொது மேலாளர், அதற்கு பிறகு பொது மேலாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம். ஆனால் இந்த முறை பின்பற்றப்படவில்லை. மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 3 பெண்களும் நேரடியாக எந்த புகாரும் கொடுக்கவில்லை. அருவங்காடு தொழிற்சாலையில் ராணுவத்துக்கு தேவையான வெடி மருந்துகளை தயாரித்து வருவதால், பாதுகாப்பு கருதி சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவற்றை மீறும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கைக்கடிகாரம், மோதிரம் போன்றவற்றை அணிந்து வர அனுமதி இல்லை. எக்காரணம் கொண்டும் தாலியை அணிந்து வரக்கூடாது என்று யாரும் கூறுவது இல்லை. ஏனெனில் பணியின்போது பாதுகாப்பான சீருடையை முகம் வரை அணிவதால் பாதிப்பு ஏற்படாது. கோவில் உள்ள இடம் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அனுமதியுள்ள தொழிலாளர்கள் மட்டுமே அங்கு செல்ல முடியும். அந்த 3 பெண் தொழிலாளர்களும் அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட இடத்துக்கு சென்றதால் 2 உயர் அதிகாரிகளும் அவர்களை எச்சரித்து அனுப்பி உள்ளனர். எங்களுக்கு கிடைத்த புகார் கடிதத்தின்படி விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

அதில் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, புகாரில் கூறியுள்ள நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 2 பேரும் வேறு இடத்தில் இருந்தது நிரூபணமாகி உள்ளது. கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பித்து உள்ளோம். எனவே அந்த 3 பெண் தொழிலாளர்களும், தொழிற்சங்கத்தின் ஒரு பிரிவினரால் தூண்டப்பட்டு தவறான தகவல்களை பரப்பி உள்ளனர். தொழிற்சாலையின் விதிமுறைகளை மீறி தவறான தகவல்களை பரப்பிய 3 பெண் தொழிலாளர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 18 பேர் என மொத்தம் 21 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது இணை பொது மேலாளர்(உற்பத்தி) பாலசுப்பிரமணியம், இணை பொது மேலாளர்(பாதுகாப்பு) தமிழ்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story