கஜா புயல் பாதிப்பு; பொங்கல் திருவிழாவுக்காக பயிரிடப்பட்ட கரும்பு– மஞ்சள் பயிர்கள் நாசம்- இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


கஜா புயல் பாதிப்பு; பொங்கல் திருவிழாவுக்காக பயிரிடப்பட்ட கரும்பு– மஞ்சள் பயிர்கள் நாசம்- இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Nov 2018 11:16 PM GMT (Updated: 17 Nov 2018 11:16 PM GMT)

கஜா புயல் பாதிப்பையொட்டி திருப்பத்தூர் அருகே பொங்கல் விழாவிற்காக பயிரிடப்பட்ட கரும்பு மற்றும் மஞ்சள் செடிகள் முற்றிலும் சேதமாகியது. இதற்கான இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்,

நேற்று முன்தினம் ஏற்பட்ட கஜா புயலால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இதையொட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த புயல் விவசாயிகளின் விளை நிலங்களையும் முற்றிலும் பாதித்ததால் அவர்கள் மிகவும் பாதிப்படைந்தனர். திருப்பத்தூர் அருகே நயினார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கரும்பு, நெல், மஞ்சள், வாழை, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது. பொங்கல் விழாவிற்கு இன்னும் 2 மாதம் மட்டுமே உள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் கரும்பு மற்றும் மஞ்சள் பயிர்கள் பயிரிட்டிருந்தனர். இந்தநிலையில் கஜா புயல் காரணமாக அறுவடைக்கு சில நாட்கள் இருந்த நிலையில், இந்த பயிர்கள் முற்றிலும் முறிந்து தரையில் சாய்ந்ததால், விவசாயிகளுக்கு பெரும் சேதமானது.

இதுகுறித்து நயினார்புரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனியப்பன் கூறியதாவது:– தமிழர்களின் திருவிழாவான பொங்கல் விழா இன்னும் 2 மாதங்களில் வருவதையொட்டி நிலத்தில் கரும்பு, மஞ்சள், வாழை, கேழ்வரகு பயிரிட்டிருந்தேன். அதில் கரும்பு பயிர் நன்கு விளைச்சல் இருந்து வந்தது. இதேபோல மஞ்சள் செடியும் இருந்து வந்த நிலையில், கஜா புயல் வீசியதால் இங்கிருந்த கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் சேதமானது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இங்கு விளைவிக்கப்படும் கரும்பு மற்றும் மஞ்சள் பயிர்களை சில்லரை வியாபாரிகள் இங்கு வந்து வாங்கிச் செல்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்தநிலையில் இந்தாண்டு புயல் பாதிப்பால் பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story