கஜா புயலின் போது சிறப்பாக பணியாற்றிய தமிழக அரசுக்கு நன்றி - ப.சிதம்பரம் பேட்டி
கஜா புயலின் போது சிறப்பாக பணியாற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
காரைக்குடி,
காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கஜா புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தமிழக அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்க உள்ளதை வரவேற்கிறேன்.
உயிருக்கு பத்து லட்சம் ஈடாகாது என்றாலும் இந்த உதவி சரியானதே. இந்த புயலின் போது தமிழக அரசு விரைந்து செயல்பட்டு சிறப்பாக பணியாற்றியது அதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேசிய பேரிடர் மையம் 2005–ல் அமைக்கப்பட்டது. 13 ஆண்டுகளில் நல்ல அனுபவம் பெற்றுள்ளது. முன் எச்சரிக்கையோடு பேரிடர்களை எதிர்கொள்ளும் வல்லமை பெற்றது. அதன் பணி சிறப்பானது.
மத்திய உள்துறை செயலர் ராஜீவ்தபாவிடம் போனில் பேசி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து குழுக்களை அனுப்பி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளேன். மத்திய அரசு இதனை செய்யும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம் எல்.ஏ. என்.சுந்தரம், சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாங்குடி, நகரத்தலைவர் பாண்டி, ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் கே.கே.களஞ்சியம் ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சிவகங்கை சென்றார். அங்கு திருவள்ளுவர் தெருவை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளராக பணியாற்றிய முத்துமுருகன், அதே தெருவில் உள்ள ஒரு வீட்டின் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வீட்டிற்கு நேரில் சென்ற ப.சிதம்பரம், இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்பு நெற்குப்பை பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளரான எலிசபெத்ராணி மரம் சாய்ந்து விழுந்ததில், மரத்தின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பலியானார். அவரது உடலுக்கு நேற்று ப.சிதம்பரம் அஞ்சலி செலுத்தினர். அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எம்.பழனியப்பன், எல்.சுப்பிரமணியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன் கட்சிப் பிரமுகர்களுடன் சென்று, எலிசபெத்ராணியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ.10 ஆயிரம் வழங்கினார். அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில்நாதன் அஞ்சலி செலுத்தி, இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கி, சம்பவம் குறித்து கேட்டறிந்து அரசு உதவி கிடைக்க ஆவண செய்யப்படும் என்று கூறினார்.