கஜா புயல் நடவடிக்கை: எதிர்க்கட்சிகளின் பாராட்டு அரசுக்கு உற்சாகம் தருகிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
கஜா புயல் நடவடிக்கையில் அரசின் செயல்பாட்டு எதிர்க்கட்சிகள் பாராட்டு தெரிவித்து இருப்பது அரசுக்கு உற்சாகத்தை தருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
வைகை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது கனமழையின் காரணமாக மஞ்சளாறு மற்றும் வரகுமானதி ஆற்றில் இருந்து 9 ஆயிரம் கன அடி தண்ணீர் கூடுதலாக வருகின்றது. இதன்காரணமாக மதுரை வைகை ஆற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் இருகரையும் நீர் தொட்டு சென்றது. அதுமட்டுமின்றி சுமார் 10 ஆண்டுக்கு பிறகு தரைப்பாலத்தை தண்ணீர் முழ்கடித்து சென்றது. எனவே தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆற்றில் தண்ணீர் சீராக செல்வதற்கு ஏற்றப்படி, தரைப்பால ராட்த குழாய்களில் அடைப்பு தொடர்ந்து சீரமைக்கப்பட்டது.
இந்த பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ, கலெக்டர் நடராஜன், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் நேற்று ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–
வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கி குளிக்க கூடாது என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றின் இரு கரைகளிலும் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கஜா புயல் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சியினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது அரசுக்கு உற்சாகத்தை தருகிறது. மு.க.ஸ்டாலின் பாராட்டி இருப்பது ஆரோக்கியமான அரசியல் ஆகும். புயல் சேதங்களை மதிப்பீடு செய்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்போம். அவர்கள் அதனை பரிசீலித்து போதிய நிதி வழங்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், மாநகராட்சி துணை ஆணையாளர் மணிவண்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், மதுரை வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன், வடக்கு தாசில்தார் சிவக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.