அரக்கோணம் நகராட்சியில், குப்பைகளை தரம்பிரிக்க ரூ.3¼ கோடியில் பயோ மெட்ரிக் கருவிகள் ஆணையாளர் தகவல்
அரக்கோணம் நகராட்சியில் குப்பைகளை தரம்பிரிக்க ரூ.3¼ கோடியில் பயோ மெட்ரிக் கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் சண்முகம் கூறினார்.
அரக்கோணம்,
அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி வார்டு பகுதியில் பொதுமக்கள் கொட்டுவதற்காக தெருக்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சேகரித்து லாரிகள் மூலம் அரக்கோணம் அருகே சில்வர்பேட்டையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வருகின்றனர்.
குப்பைகள் கொட்டப்படுவதால் சில்வர்பேட்டை பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும் குப்பைகளை கொட்டாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் குப்பைகள் ஒரே இடத்தில் தேங்காத வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இதுகுறித்து நகராட்சி (பொறுப்பு) ஆணையாளர் சண்முகம் கூறியதாவது:-
சில்வர்பேட்டை பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் ரூ.88 லட்சத்தில் சுற்று சுவரும், ரூ.30 லட்சத்தில் மக்காத குப்பைகளை சேகரித்து வைக்க தனி அறையும் கட்டப்பட உள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரிக்க ரூ.3 கோடியே 30 லட்சத்தில் பயோ மெட்ரிக் கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை பயோ மெட்ரிக் கருவிகள் மூலம் தரம்பிரித்து உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சில்வர்பேட்டை பகுதியில் குப்பைகள் தேங்குவதற்கு வாய்ப்புகள் கிடையாது. மக்கும் குப்பைகளை கூழாக்கி உரமாக்க அரக்கோணம் நகரில் ராஜீவ்காந்தி நகர், ரத்தன்சந்த் நகர், சோமசுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் நுண்ணுயிர் உரமாக்கும் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கும் குப்பைகள் இந்த மையங்களில் சேகரித்து உரமாக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளை சில்வர்பேட்டையில் உள்ள அறையில் வைத்து பின்னர் தனியார் தொழிற்சாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கருவிகள் வாங்கப்பட்டவுடன் சில்வர்பேட்டையில் தேங்கி உள்ள குப்பைகளை தரம்பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் சில்வர்பேட்டை பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் கிடையாது. சுற்றுசுவர் கட்டிய பின்னர் குப்பைகள் எதுவும் காற்றில் பறக்காத நிலை ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story