நாமக்கல் நகராட்சிக்கு ரூ.7.30 கோடியில் புதிய கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


நாமக்கல் நகராட்சிக்கு ரூ.7.30 கோடியில் புதிய கட்டிடம்  எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 18 Nov 2018 10:45 PM GMT (Updated: 18 Nov 2018 5:00 PM GMT)

நாமக்கல் நகராட்சிக்கு ரூ.7 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

நாமக்கல், 

நாமக்கல்–திருச்செங்கோடு சாலையில் வாரச்சந்தை வளாகத்தில் நகராட்சிக்கு ரூ.7 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 3 தளங்களுடன் புதிதாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, கலெக்டர் ஆசியா மரியம், பி.ஆர்.சுந்தரம் எம்.பி., கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, புதிய கட்டிடத்தை ரிப்பன்வெட்டி திறந்துவைத்தார். தொடர்ந்து கல்வெட்டை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினார். மேலும் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்–அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நாமக்கல்லை சேர்ந்த லாரி, கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வெளியேவந்த அவர் நாமக்கல்–திருச்செங்கோடு சாலையில் சிறிது தூரம் நடந்துசென்று இருபுறமும் அணிவகுத்து நின்ற பொதுமக்களை பார்த்து கைஅசைத்தவாறு சென்றார். இன்று (திங்கட்கிழமை) முதல் நாமக்கல் நகராட்சி அலுவலக பணிகள் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதியை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அங்கிருந்த டாக்டர்கள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி செயல்படும் விதம் குறித்து முதல்–அமைச்சரிடம் விளக்கினர். பின்னர் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியின் பயன்கள் குறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் உஷா கூறியதாவது:–

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியின் உதவியுடன் மனித உடலின் எந்த பாகத்தையும் துல்லியமாக ஸ்கேன் செய்யமுடியும். இதற்காக தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.8 ஆயிரம் கட்டணம் பெறுகிறார்கள். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2,500 மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்துள்ளோம். இன்னும் ஒரிரு நாட்களில் இந்த கருவி பயன்பாட்டுக்கு வரும். அதன்பிறகு நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பேர் ஸ்கேன் எடுத்து கொள்ளலாம். தமிழக முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் இலவசமாக ஸ்கேன் செய்துகொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


முதல்–அமைச்சரின் வருகையை முன்னிட்டு நாமக்கல் நகர் முழுவதும் அவரை வரவேற்கும் வகையில் அ.தி.மு.க.வினர் கட்சிக்கொடி மற்றும் தோரணங்களை கட்டி இருந்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் லட்சுமி, நாமக்கல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன், நாமக்கல் நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் டி.எல்.எஸ்.காளியப்பன், நாமக்கல் நகராட்சி முன்னாள் துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் மற்றும் அரசு அதிகாரிகள், அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

முன்னதாக முதல்–அமைச்சருக்கு ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் சரோஜா, கலெக்டர் மு.ஆசியா மரியம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் முதல்–அமைச்சரை வரவேற்றனர். நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் காளியப்பன் (ராசிபுரம்), இ.கே.பொன்னுசாமி (நாமகிரிப்பேட்டை கிழக்கு), வக்கீல் தாமோதரன் (வெண்ணந்தூர்), எல்.எஸ்.மணி (நாமகிரிப்பேட்டை கிழக்கு ), முன்னாள் எம்.எல்.ஏ. கலாவதி, ராசிபுரம் நகர அ.தி.மு.க. அவைத்தலைவர் ராமசாமி, நகர பொருளாளர் கோபால், சூப்பர் பட்டு சங்க துணைத்தலைவர் எஸ்.பி.கந்தசாமி, நகர துணை செயலாளர் மனோகரன், நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், மகளிர் அணி நிர்வாகிகள் கலைவாணி, ராதாசந்திரசேகர் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முதல்–அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.

Next Story