ஓசூரில் கோர விபத்து: லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி கணவன் - மனைவி உள்பட 4 பேர் பலி


ஓசூரில் கோர விபத்து: லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி கணவன் - மனைவி உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 19 Nov 2018 4:15 AM IST (Updated: 18 Nov 2018 11:31 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் கணவன், மனைவி உள்பட 4 பேர் பலியானார்கள்.

ஓசூர்,

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 44). இவர் அந்த பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்தது. இதனால் அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

அவருடன் அவரது மனைவி காந்திமதி (38), பெங்களூரு ஆடுகோடி விநாயகர் நகர் முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்த செல்வத்தின் அக்கா மகன் சரவணன் (26) ஆகியோர் உடன் சென்றனர். ஆம்புலன்சை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள அந்தநல்லூரை சேர்ந்த ஜெயசூர்யா (23) என்பவர் ஓட்டி சென்றார். அவரது உறவினர் மதன்குமார் (22) என்பவர் மாற்று டிரைவராக ஆம்புலன்சில் அமர்ந்திருந்தார்.

அந்த ஆம்புலன்ஸ் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து ஓசூருக்கு எண்ணெய் பாரம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி டீசல் காலியானதால் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது திடீரென்று ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் ஆம்புலன்சில் இருந்த செல்வம், அவரது மனைவி காந்திமதி, உறவினர் சரவணன், மாற்று டிரைவர் மதன்குமார் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். டிரைவர் ஜெயசூர்யா படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் விபத்தில் பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த ஜெயசூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரி மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி கணவன், மனைவி உள்பட 4 பேர் பலியான சம்பவம் ஓசூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story