புயலுக்கு இரையான மாந்தோப்புகள் ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்ததால் விவசாயிகள் வேதனை


புயலுக்கு இரையான மாந்தோப்புகள் ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்ததால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 19 Nov 2018 4:30 AM IST (Updated: 19 Nov 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடியில் மாந்தோப்புகள் புயலுக்கு இரையாகி உள்ளன. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மா மரங்கள் முறிந்து விழுந்து விட்டதாக விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் மாந்தோப்புகள் உள்ளன. இப்பகுதி கிராம விவசாயிகள் மா சாகுபடியில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள். நல்ல லாபம் தரும் தொழிலாக மா சாகுபடி உள்ளது. இந்த நிலையில் வேதாரண்யத்தில் கரையை கடந்து வந்த ‘கஜா’ புயல் இந்த ஆண்டுக்கான மா விளைச்சலை கேள்விக்குறியாக்கி உள்ளது.

வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தில் ஆயிரக்கணக்கான மா மரங்கள் புயலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக மாந்தோப்புகளில், மாங்காய்களுக்கு பதிலாக மாமரங்களாக விழுந்து கிடப்பதை காண முடிகிறது. புயலுக்கு மாந்தோப்புகள் இரையாகி விட்டதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

விழுந்தமாவடி பகுதியில் மா சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது. புயல் காற்றில் சிக்கி பல ஆயிரம் மாந்தோப்புகள் சின்னாபின்னமாகி உள்ளன.

விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறது கஜா புயல். எனவே மா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story