நிவாரணம் கேட்டு மக்கள் போராட்டம்: பயணத்தை பாதி வழியில் ரத்து செய்து விட்டு மு.க.ஸ்டாலின் சென்னை பயணம்


நிவாரணம் கேட்டு மக்கள் போராட்டம்: பயணத்தை பாதி வழியில் ரத்து செய்து விட்டு மு.க.ஸ்டாலின் சென்னை பயணம்
x
தினத்தந்தி 18 Nov 2018 11:15 PM GMT (Updated: 18 Nov 2018 7:20 PM GMT)

தஞ்சை அருகே நிவாரணம் கேட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணத்தை பாதி வழியில் ரத்து செய்துவிட்டு மு.க.ஸ்டாலின் சென்னைக்கு திரும்பி சென்றார்.

தஞ்சாவூர்,

கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மக்கள் வீடுகளை இழந்தும், தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தையும், மரங்களையும், கால்நடைகளையும் இழந்து பரிதவித்து வருகின்றனர். மீனவர்கள் தங்களது படகுகள், வலைகள் சேதமடைந்ததால் மிகுந்த கவலையில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை பார்வையிட்டார். நாகையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் வழியில் நாகை அக்கரைப்பேட்டை மீன் இறங்கு தளத்துக்கு சென்று சேதமடைந்த பகுதிகளையும், அந்தப்பகுதி மீனவர்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து வேதாரண்யம் பகுதியில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தஞ்சைக்கு வந்து இரவு தங்கினார்.

நேற்று புதுக்கோட்டை பகுதிக்கு சென்று அங்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு இருந்தார். இதற்காக நேற்று காலையில் அவர், தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து நிர்வாகிகளுடன் காரில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார். தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் கந்தர்வகோட்டை அருகே 100-க்கும் மேற்பட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கக்கோரி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து சாலையின் நடுவே நின்று கொண்டிருந்தனர். இதனால் மு.க.ஸ்டாலினால் தொடர்ந்து அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதனையடுத்து புதுக்கோட்டை செல்லும் பயணத்தை பாதி வழியில் ரத்து செய்துவிட்டு அங்கிருந்து தஞ்சை-வல்லம் சாலையில் தஞ்சை வழியாக திருச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story