ஆனந்தவல்லி அம்மன் கோவில் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
பல நாட்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டியும் பணிகள் நடைபெறாததால், ஆனந்தவல்லி அம்மன் கோவில் ரோட்டை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயம் முன்புள்ள ரோட்டை தார்சாலை போடுவதற்காக ஆங்காங்கே ரோட்டை தோண்டி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. பல நாட்கள் ஆகியும் இந்த ரோட்டை சீரமைக்காததால் இந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், வயதானவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை என்று பொதுமக்கள் புகார் செய்தனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:– ஜல்லிக்கற்கள் கொட்டி பல நாட்கள் ஆகியும் ரோடு போடப்படாததால், இந்த ரோட்டில் செல்பவர்கள் விபத்தில் செல்லும் அவல நிலை தொடர் கதையாகி வருகின்றன.
தார்ச்சாலை அமைக்க ரோட்டை பெயர்த்து ஜல்லிகற்கள் கொட்டியும் இன்று வரை பணிகள் நடக்காததால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் பரிதவித்து வருகின்றனர். மானாமதுரை மேல் கரையையும், கீழ் கரையையும் வைகை ஆறு இரண்டாக பிரிக்கிறது. கீழ்கரையை சேர்ந்தவர்கள் ஆனந்தவல்லி ஆலயம் முன்பு உள்ள வைகை ஆற்றை கடந்து நகருக்குள் வருவது வழக்கம். அதுபோல அக்ரஹாரம், மரக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் ஆனந்தவல்லி அம்மன் கோவில் வழியாக அண்ணாசிலை, பைபாஸ் ரோடு செல்வது வழக்கம்.
இவ்வாறு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த ரோட்டை தார்ச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலைகள் சமன் படுத்தப்பட்டு கிராவல் மண் கொட்டி சமன்படுத்தி அதன் மேல் ஜல்லிகற்களும் பரப்பட்டன. போன மாதம் ஜல்லிகற்கள் கொட்டியும் தார்ச்சாலை அமைக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இந்த ரோட்டில் செல்லும் வாகனங்களின் டயர்கள் அடிக்கடி சேதமடைகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமதுவிடம் கேட்ட போது, தற்போது மழை காலம் என்பதால், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் தார் ரோடு அமைக்கும் பணி தடைபட்டுள்ளது. மழை நின்ற பின்பு ரோடு சீரமைக்கும் பணிகள் நடக்கும் என்றார். அதிகாரியின் கருத்தை பொதுமக்களிடம் கூறி கேட்ட போது, மானாமதுரையில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனால் அதிகாரிகள் ஏதோ காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காக எதையோ காரணமாக சொல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து ஆனந்தவல்லி அம்மன் கோவில் ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.