நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி கத்தியால் குத்திக்கொலை தடுக்க முயன்ற மாமனார் படுகாயம்; டிரைவருக்கு வலைவீச்சு


நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி கத்தியால் குத்திக்கொலை தடுக்க முயன்ற மாமனார் படுகாயம்; டிரைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Nov 2018 4:30 AM IST (Updated: 19 Nov 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கார் டிரைவர் கத்தியால் குத்திக்கொன்றார். அதை தடுக்க முயன்ற மாமனாரையும் அவர் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்தார். கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி காட்டுக்கொட்டகை பகுதியில் வசித்து வருபவர் தங்கவேல்(வயது 48). இவருடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகாவில் உள்ள நாகியம்பட்டி கிராமம் ஆகும். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வெள்ளாளப்பட்டியில் உள்ள இளங்கோ என்பவருடைய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அங்கேயே குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்து வருகிறார்.

தங்கவேலின் மகள் பார்வதியை(26) திருச்சி கே.கே.நகர் இந்திரா நகரை சேர்ந்த ராஜ்குமார் என்ற மணிகண்டன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு ஸ்ரீதர்(8) என்ற மகனும், சுதா(7) என்ற மகளும் உள்ளனர். வெளிநாட்டில் கார் டிரைவராக வேலை பார்த்த ராஜ்குமார் குடும்ப செலவுக்கு பணம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பார்வதி கட்டிட சித்தாள் வேலை செய்து குழந்தைகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு வந்த ராஜ்குமார், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் மது குடித்துவிட்டு அவரிடம் தகராறு செய்தார். மேலும், அவரை தினமும் அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பார்வதியை வெள்ளாளப்பட்டி காட்டுக்கொட்டகை பகுதியில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் விட்டு, விட்டு ராஜ்குமார் சென்றதாக தெரிகிறது. இதற்கிடையில் பார்வதி தனது குழந்தைகளை பார்க்க திருச்சிக்கு வந்தார். ஆனால் அவரை குழந்தைகளை பார்க்கவிடாமல் ராஜ்குமார் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பார்வதி அங்கிருந்து தம்மம்பட்டி அருகே தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டுக்கு சென்று, அவரிடம் நடந்ததை கூறி அழுதார். அவர் பார்வதியை தம்மம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் கொடுத்தார்.

ஆனால் போலீசார் புகாரை வாங்காமல், குடும்பத்தகராறுக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் பார்வதி வெள்ளாளப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கினார். நேற்று முன்தினம் இரவு பார்வதி பெற்றோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். தங்கவேல் வீட்டுக்கு வெளியே தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த பார்வதியை கத்தியால் குத்தினார். இதனால் பார்வதி அலறினார். சத்தம் கேட்டு எழுந்த தங்கவேல் எழுந்து வீட்டுக்குள் ஓடி வந்து, ராஜ்குமாரை தடுக்க முயன்றார். ஆனால் ராஜ்குமார் அவரையும் கத்தியால் குத்தினார். இதில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார்.

இதற்கிடையே கத்தி குத்து காயத்துடன் வெளியே ஓடிவந்த பார்வதியை துரத்தி சென்று ராஜ்குமார் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து படுகாயத்துடன் கிடந்த பார்வதியையும், தங்கவேலையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பார்வதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தங்கவேலுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

Next Story