நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் - இல.கணேசன் எம்.பி. பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் - இல.கணேசன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2018 11:30 PM GMT (Updated: 18 Nov 2018 8:23 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மதுரையில் இல.கணேசன் எம்.பி. கூறினார்.

மதுரை,

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் எம்.பி. மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசு கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது. அதுபோல் எதிர்க்கட்சிகள், கட்சி பேதங்களை மறந்து முதல் முறையாக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளன. அவர்களுக்கும் என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு கஜா புயல் விவகாரத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எத்தகைய வேகத்துடன் மேற்கொண்டதோ, அதேபோல் நிவாரண உதவி வழங்குவதிலும் வேகமாக செயல்பட வேண்டும். நரேந்திர மோடி பிரதமராக உள்ளார் என்பதையும் மறந்து ராகுல் காந்தி தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார். காந்தி, காமராஜர் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி இன்றைக்கு இல்லை. இப்போது இருப்பது குடும்ப கட்சியாக இருக்கிறது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வி‌ஷயத்தில் தேவசம் போர்டு, சுப்ரீம் கோர்ட்டில் காலஅவகாசம் கோரியிருப்பது ஆறுதல் தருகிறது. சுப்ரீம் கோர்ட்டு இனிமேலாவது இந்து மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். இதற்கு அய்யப்பன் அவர்களுக்கு நல்ல புத்தியை தர வேண்டும். தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. தயாராக உள்ளது.

பிரதமர் மோடி 4½ ஆண்டு காலம் ஊழலற்ற ஆட்சி தந்துள்ளார். அடுத்த தேர்தலை கருத்தில் கொள்ளாமல் அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை மோடி நிறைவேற்றி விட்டார். இன்னும் ஒரு சில வாக்குறுதிகள் மட்டும் நிலுவையில் உள்ளன. மீண்டும் ஆட்சிக்கு வந்து, அதனை நிறைவேற்றுவோம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து இல.கணேசன் எம்.பி. தலைமையில் பா.ஜ.க.வினர் சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தை சேர்ந்த சிலர், அங்கிருந்த பா.ஜ.க. கொடியை அகற்ற முயன்றனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. அப்போது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு, சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story