திண்டிவனம் அருகே விபத்து: அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; 3 பேர் பலி


திண்டிவனம் அருகே விபத்து: அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; 3 பேர் பலி
x
தினத்தந்தி 18 Nov 2018 11:15 PM GMT (Updated: 18 Nov 2018 8:28 PM GMT)

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்டதில் 3 பேர் பலியானார்கள்.

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்டதில் 3 பேர் பலியானார்கள்.

இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மணிகண்டன்(வயது 35). இவருடைய மனைவி சந்திரா(30). இவருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரா நேற்று மாலை வீடு திரும்பினார்.

மருத்துவமனையில் இருந்த சந்திராவை அவருடைய தாய் மோழியனூரை சேர்ந்த பாண்டுரங்கன் மனைவி தனலட்சுமி திண்டிவனத்திற்கு பஸ்சில் அழைத்து வந்தார். இதையடுத்து அங்கிருந்து இருவரையும் மணிகண்டன் தனது ஆட்டோவில் எண்டியூருக்கு அழைத்து சென்றார்.

இதேபோல் முன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் சரவணன்(30). இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவர் தனது நண்பரான நகர் கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் பெருமாள்(32) என்பவருடன் திண்டிவனத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் முன்னூர் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மானூர் கூட்டுரோடு அருகே சென்ற போது, முன்னால் சென்ற மணிகண்டனின் ஆட்டோவை சரவணன் முந்திசெல்ல முயன்றதாக தெரிகிறது. அந்த சமயத்தில் எதிரே மரக்காணத்தில் இருந்து மினி வேன் ஒன்று வேகமாக வந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக, மினிவேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் பின்னால் வந்த ஆட்டோ மீதும் மினிவேன் மோதி விபத்துக்குள்ளானது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்து முடிந்துவிட்டது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பெருமாள், ஆட்டோவில் வந்த தனலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் வாகனங்களின் இடிபாட்டிற்குள் சிக்கி மினிவேன் டிரைவர் விட்லாபுரம் ராஜீவ்காந்தி(35), மணிகண்டன், சந்திரா, சரவணன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சரவணன் உயிரிழந்தார்.

பின்னர், ராஜீவ்காந்தி, மணிகண்டன், சந்திரா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே விபத்துபற்றி அறிந்த பிரம்மதேசம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் மரக்காணம்-திண்டிவனம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story