புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனை தான் போராட தூண்டுகிறது கி.வீரமணி பேட்டி


புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனை தான் போராட தூண்டுகிறது கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2018 11:00 PM GMT (Updated: 18 Nov 2018 9:30 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனை தான் போராட தூண்டுகிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

திருச்சி,

புயல் பற்றி அறிவிப்பு வந்தவுடன் தமிழக அரசு சிறப்பான முன்னேற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தியது பாராட்டுக்குரியது. மிகப்பெரிய அளவில் புயல் தாக்கியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் குறைவான உயிர்ச்சேதம் ஏற்பட்டது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், ஒன்றை கவனிக்க தவறி விட்டார்கள். அடுத்த கட்ட பணி என்ன என்பது குறித்து சரியாக திட்டமிடவில்லை. மக்களுக்கு வேண்டிய உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பக்கத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் தீவிரமாக பணியாற்ற வேண்டும். இதனை அரசியல் கண்ணோட்டமின்றி பொதுநல கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனை தான் அவர்களை போராட தூண்டுகிறது. உடனடியாக மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். நிவாரண பணிகளை மேற்கொள்ள முன்வரும் தன்னார்வலர்களை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

சாதிமறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பை அரசு உருவாக்க வேண்டும். ஆணவக்கொலைகளை தடுப்பதற்கு காவல்துறையில் தனிப்பிரிவு ஒன்றை தொடங்க வேண்டும். சாதிமறுப்பு காதல் திருமணம் செய்பவர்கள் எங்களை போன்ற அமைப்புகளிடம் பாதுகாப்புக்காக அணுக வேண்டும். பெற்றோர் கூறும் ஆசை வார்த்தைகளை கேட்டு அவர்கள் பலியாகி விடக்கூடாது. இதில் அரசு செய்ய வேண்டிய பணியை செய்யாதபோது, ஒத்த கருத்துடைய அமைப்புகளை சேர்த்து ஒரு குழு அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து தந்தை பெரியார் 140-ம் பிறந்தநாள் விழா நூல்கள் வெளியீட்டு விழா மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க துணைத்தலைவர் நந்தலாலா, தூய வளனார் கல்லூரி பேராசிரியர் சூசை, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கலைச்செல்வன், திராவிடர் கழக மண்டல தலைவர் நற்குணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story