சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Nov 2018 3:11 AM IST (Updated: 19 Nov 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர், நல்லூர், ரெத்தினகிரியூர் ஆகிய கிராம பகுதிகளில் ‘கஜா’ புயல் வீசியதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அந்த கிராமங்களில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் வினியோகம் பாதிக்கப்பட்டது.

மின்சாரம் வினியோகம் பாதிக்கப்பட்டதால், மின்மோட்டார்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் சேதமடைந்த வீடுகளை வருவாய்த்துறையினர் வந்து பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்தநிலையில் மின்சாரம் வினியோகம் செய்யவும், சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு இழப்பீடு வழங்கக்கோரியும் 3 கிராம மக்களும் திண்டுக்கல்-கரூர் சாலையில் கோவிலூரில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் சுரேஷ்கண்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்கவும், மின்கம்பங்களை சீரமைத்து மின்வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story