கருங்கல் பேரூராட்சியில் புதிய டாஸ்மாக் கடைக்கு அனுமதியளிக்க கூடாது கலெக்டரிடம் மனு


கருங்கல் பேரூராட்சியில் புதிய டாஸ்மாக் கடைக்கு அனுமதியளிக்க கூடாது கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 20 Nov 2018 4:30 AM IST (Updated: 19 Nov 2018 8:17 PM IST)
t-max-icont-min-icon

கருங்கல் பேரூராட்சியில் புதிய டாஸ்மாக் கடைக்கு அனுமதியளிக்க கூடாது என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

இதற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கக்கோரியும், கல்விக்கடன், இலவச வீடு, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலைய (ஐ.டி.ஐ.) வெல்டர் பிரிவு மாணவர்கள் சுமார் 30–க்கும் மேற்பட்டோர் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நாங்கள் கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வருகிறோம். படிப்புக்கு தேவையான ஆசிரியர்களும் இல்லை. நாங்கள் பயின்றுவரும் வெல்டர் பிரிவில் பாதுகாப்பு கருவிகளும் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது.

முறையான பாதுகாப்பு இல்லாததால் இன்று ஒரு மாணவனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அவனுக்கு என்ன நிலைமை ஆகுமோ? என்ற அச்சம் கொள்கிறோம். எங்களுக்கும் பயிற்சியின்போது என்ன நிலைமை ஆகுமோ? என்று அச்சப்படுகிறோம். எங்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

குமரி மேற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் பினுலால்சிங் தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் டி.ஆர்.செல்வம், பொருளாளர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் கருங்கல் பகுதியில் உள்ள பள்ளிகள் சிலவற்றின் தலைமை ஆசிரியர்கள், அருட்பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாங்குழி என்னும் இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. புதிய மதுக்கடை அமைய உள்ள இடத்தில் இருந்து 30 மீட்டர் தூரத்தில் அம்மன் கோவிலும், 100 மீட்டர் முதல் 200 மீட்டர் தூரத்தில் கிறிஸ்தவ ஆலயங்களும், பள்ளிகளும் அமைந்துள்ளன. இந்த பகுதியில் மதுபானக்கடை அமைந்தால் பள்ளிக்கு செல்லும் சிறுவர்– சிறுமிகள், ஆலயத்துக்கு செல்வோர்க்கு மிக இடையூறாக அமையும் என்பதால் இந்த மதுபானக்கடைக்கு அனுமதியளிக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியினர் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் மருந்துகள், உபகரணங்களுக்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கீடு இருந்தும் பெரும்பகுதி நிதி முறைகேடு செய்யப்படுகிறது. இதனால் முழுவீச்சில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் நடைபெறவில்லை. குடிநீரில் நோய் பரவாமல் பாதுகாத்திட குளோரின் மாத்திரைகள், பொடிகள் போடப்படுகிறது. இதன் அளவு பெரிதும் குறைக்கப்பட்டு பெரிய அளவுக்கு நிதி மோசடி நடைபெறுகிறது.

குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்வது பெருமளவுக்கு குறைந்துள்ளது. குடிநீரை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் அளவும் பெரும்பகுதி குறைக்கப்பட்டு, முறைகேடாக கணக்கு காட்டப்படுகிறது. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்தால் கொசு ஒழிப்பும், சுகாதாரமான குடிநீரும் கிடைக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட கூட்டுறவு நிறுவன இ–சேவை மைய கணினி இயக்குபவர்கள் சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் ரமேஷ், பொருளாளர் மணிகண்டன் உள்பட பலர் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

தினசரி வருகை பதிவேடு, பணிப்பதிவேடு, ஊதியம் வழங்கும் பதிவேடுகள் பராமரிக்க வேண்டும், மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் அல்லது பல ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரியும் எங்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின்கீழ் தற்போது நடைமுறையில் உள்ள தினக்கூலி ரூ.360 வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

Next Story